கிளிநொச்சி வன்னேரிக் குளத்திலுள்ள சுற்றுலா மையத்தினை இயக்குவது என்பது கரைச்சி பிரதேச சபைக்கு சவாலான விடயமாகவுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கொடை நிதியின் ஆறு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இச்சுற்றுலா மையமானது கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட வன்னேரிக்குளம் சுற்றுலா மையமானது தற்போது எவ்வித பயன்பாடுகளுமின்றி அதன் மின் இணைப்புக்கள் கழவாடப்பட்டும் கட்டுமானங்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.
இந்நிலையில் இச்சுற்றுலா மையம் அமைக்கப்பட்டதிலிருந்து அது எவ்விதமான செயற்பாடுகளுமின்றி பயனற்ற நிலையில் உள்ளது. இது தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளரை வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போது இதனை பாதுகாக்கும் வகையில் பிரதேச சபையினால் காவலாளி ஒருவர் நியமிக்கப்பட்டு அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதனை செயற்படுத்துவதற்கு பெருந்தொகை நிதி தேவையாகவுள்ளது.
அவ்வாறான நிதி சபையிடமில்லை. இதனைவிட சுற்றுலாப் பயணிகள் இப்பிரதேசத்திற்கு வருவதாயின் அதற்கான பிரதான போக்கு வரத்துப் பாதையாக காணப்படும் திருமுறிகண்டி அக்கராயன் வீதி இதுவரை புனரமைக்கப்பபடாத நிலையில் காணப்படுகின்றது.
இவ்வீதி புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் அதிகரிக்கும் போதும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். கரைச்சி பிரதேச சபையை பொறுத்தவரையில் இதனை இயக்குது என்பது தற்போதைக்கு ஒரு சவாலான விடயமாகவே உள்ளது என்றார்.
பரந்தன் நிருபர்
No comments:
Post a Comment