உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரத்ன தேரரின் நியாயமான கோரிக்கையை ஜனாதிபதியும், பிரதமரும் ஏற்றுக்கொண்டு அவரது போராட்டத்தை முடித்து வைக்க வேண்டுமென கல்முனை ஸ்ரீ சுபத்திராராம மஹாவிகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரத்ன தேரர் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த சங்கரட்ண தேரர் சிங்கள மக்களுக்கு எழுந்துள்ள நியாயமான சந்தேகங்களை நீதியான விசாரணைகள் மூலம் தீர்த்து வைக்கின்ற பொறுப்பு அரசாங்கத்தின் கடமையாகும்.
குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை உயர் பதவிகளில் வைத்துக் கொண்டு விசாரிக்க முடியாது. பதவிகளில் இருக்கும் போது அவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். எனவே சந்தேகப்படுகின்ற அமைச்சர், ஆளுநர்களை அப்பதவியை விட்டு விலக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியரத்ன தேரர் மேற்கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசாங்கம் சிறு விடயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனை பாரதூரமாக எடுக்காவிட்டால் பல விளைவுகள் ஏற்படலாம்.
இந்நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கின்ற பாரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் வாழும் நாம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் இழப்புக்கு நியாயமான விசாரணையையும், நீதியையும் வேண்டி நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாண்டிருப்பு நிருபர்
No comments:
Post a Comment