மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியும், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் இன்று முற்பகல் தங்களது ஆளுநர் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
இன்றுறு முற்பகல் 10.45 இற்கு ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று இருவரும் ஜனாதிபதியைச் சந்தித்து தமது இராஜிமானாக் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.
நாட்டின் இன்றைய நிலைமை கருதியும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் பதவிகளை துறப்பதற்கு முடிவெடுத்ததாகத் தெரிவித்த அசாத் சாலி இது குறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொண்டார்.
ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் கைத்தொழில் வாணிபத்துறை அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் ஆகியோரை பதவி விலகக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், பொதுபலசேனா தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அத்துரலியே ரதன தேரர் கண்டியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொதுபலசேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இன்று நண்பகல் 12 மணி வரை காலக்கெடு விதித்திருந்தார்.
நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுவருவதால், ஏற்படக்கூடிய விளைவுகளைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பு கருதியுமே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு ஆளுநர்களினதும் இராஜினாமாக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியது.
எம். ஏ. எம். நிலாம்
No comments:
Post a Comment