உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க, ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தெரிவுக் குழுவொன்றை ஸ்தாபிக்கும் முன்னர், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுக்குமாறு நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும், அது அவ்வாறு இடம்பெறவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அரசாங்கம் ஸ்தாபித்தது. அதன் முதல் அமர்வுக்கே தெரிவுக்குழுவின் தலைவர் வரவில்லை.
தெரிவுக்குழு என்பது மிகுந்த அவதானத்துடனும் அனைத்து விடயங்கள் தொடர்பிலுமான அறிவுடன் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் அறிவார்கள். சபாநாயகர் இதுதொடர்பில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமுள்ளது. ஆனால், இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை. இன்று மக்களுக்கு இதன் உறுப்பினர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெற்றது. இதுதொடர்பில் அனைத்து விடயங்களையும் அறிந்திருந்தும் எதுவித நடவடிக்கையையும் மேற்கொள்ளத் தவறிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருக்கு எதிராகவே நாம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளோம். இது விவாதத்துக்கு விரைவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு உரிய திகதியை வழங்காவிட்டால், நாட்டிலும் நாடாளுமன்றிலும் முழுமையாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? விவாதமொன்றை நடத்தினால் அனைத்து விடயங்களும் வெளிவரும் என்றே அரசாங்கத் தரப்பினர் அஞ்சுகிறார்கள். ஆனால், அனைத்து விடயங்களும் இப்போதே வெளிவந்து விட்டன” என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment