ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமாக நாளை சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையில், பதில் பாதுகாப்பு அமைச்சரை அவர் நியமிப்பாரா என்ற கேள்வி அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்துள்ளது.
கூட்டு அரசு பதவியில் இருந்த ஆரம்ப காலகட்டங்களில், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது, பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்து வந்தார்.
எனினும், அண்மைக்காலமாக அவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமலேயே வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
கடைசியாக, அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்தபோது, ஈஸ்டர் தினமன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அப்போது, பதில் பாதுகாப்பு அமைச்சராக யாரும் நியமிக்கப்படாததால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புச் சபையைக் கூட்டி முடிவுகளை எடுப்பதற்கு, முப்படைகளின் தளபதிகளும் அதிகாரிகளும் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை.
இதனால், ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன.
இந்தநிலையில், இலங்கை இன்னமும் பதற்றத்தில் இருந்து முற்றிலுமாகவே வெளிவராத நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள எடுத்து முடிவு அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறையாவது அவர், வெளிநாடு செல்லும்போது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பாரா அல்லது சீனாவில் இருந்தபடியே பாதுகாப்புப் படைகளின் தளபதிகளுடன் நேரடியான தொடர்பில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாளை சீனா செல்வும் ஜனாதிபதி எதிர்வரும் வியாழக்கிழமையே நாடு திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment