இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய 'ட்ரெண்ட்' உருவாகி வருகிறது. பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனை இந்தியர்கள் கொண்டாடி வரும் நிலையில், துவிச்சக்கர வண்டியின் 'ஹாண்டல் பார்' ஸ்டைலில் அவர் வைத்திருந்த மீசையும் பல இளம் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதேவேளை வட இந்தியாவின் பிரபல பால் நிறுவனமான அமுல் கடந்த வாரம் சனிக்கிழமையன்று, அதன் சமூக ஊடக பக்கங்களில் மீசை தொடர்பான விளம்பரம் ஒன்றை வெளியிட்டு அபிநந்தனுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது. அமுலின் நேர்த்தியான படைப்பாற்றலுக்காக இந்த விளம்பரம் சமூக ஊடக பயனர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அமுலின் இந்த விளம்பரத்தைத் தொடர்ந்து பல ட்விட்டர் பயனர்கள் அபிநந்தனின் 'ஹாண்டல் பார்' மீசையைப் போன்று தாங்களும் மீசையை திருத்தி வைத்துள்ளனர்.
பாகிஸ்தானால் கடந்த முதலாம் திகதி இரவு 9.20 மணியளாவில் அபிநந்தன் விடுவிக்கப்பட்டதையடுத்து, ட்விட்டர் பயனர் நிவேதிதா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடும்பத்தினர் அனைவருக்கும் அபிநந்தனின் ஹாண்டல் பார் மீசையை மையால் வரைந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
"அபிநந்தனின் ரசிகன் நான். அவர்தான் உண்மையான ஹீரோ, அதனால்தான் அவர் வைத்திருக்கும் மீசையைப் போன்றே நானும் வைத்திருக்கிறேன்" என்று ஏ.என்.ஐ தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த முகமது சந்த்.
வட இந்தியாவை சேர்ந்த பலரும் அபிநந்தன் ஸ்டைலில் மீசையை வைத்து அந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். சிலர், அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல வளர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் பல குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு 'அபிநந்தன்' என்ற பெயரை சூட்டியுள்ளதாகவும், சில பெற்றோர் பிறக்கப் போகும் குழந்தைக்கு 'அபிநந்தன்' பெயரைச் சூட்ட தயாராக இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெங்களூரில் உள்ள பல முடி திருத்தும் கடைகளில் வாடிக்கையாளர்கள் 'அபிநந்தன் ஸ்டைல்' மீசையை மிகவும் ஆர்வமுடன் வைத்துக் கொள்கின்றனர். கடந்த சனிக்கிழமையன்று, பெங்களூருவிலுள்ள ஒரு உள்ளூர் கடையில் குறைந்தது 15 பேர் அபிநந்தன் ஸ்டைலில் மீசை வைத்துக் கொண்டதாக கடையின் உரிமையாளர் சமீர் கான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்னும், சில கடைகளில் இவ்வாறு மீசை வைக்க இலவசம் என்று அறிவிக்கப்பட்டதாகவும், சில உரிமையாளர்கள் 50வீத கழிவில் வாடிக்கையாளர்களுக்கு 'ஹாண்டல் பார்' மீசையை வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment