கல்விக் கல்லூரிகள் ஆசிரியப் பெரும் தகைகளை உருவாக்குபவைகள். மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் குறைபாடுகளையும் இடர்பாடுகளையும் களைந்து அதனை வினைத்திறன் கொண்டதாக மாற்றுவேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லுாரிக்கு நேற்றுமுன்தினம் (03) திடீர் விஜயமொன்றை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதிகாரிகள் சகிதம் மேற்கொண்டிருந்தார்.
பீடாதிபதி கே.புண்ணிய மூர்த்தி தலைமையில் இராஜாங்க அமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதில் பழைய மாணவ சங்கத்தினரும் சமுகமாயிருந்ததோடு, கல்லூரித் தேவைகளடங்கிய மகஜரொன்றையும் சமர்ப்பித்தனர்.
இராஜாங்க அமைச்சர் அங்கு உரையாற்றும் போது, இக்கல்லுாரி பல குறைபாடுகளோடும் பௌதீக வளப்பற்றாக் குறைகளோடும் தனது பணியை இடைவிடாது செய்து வருகிறது. அதற்கு உறுதுணையானவர்களை பாராட்டுகிறேன்.
இக்கல்லூரியின் பயிலுனர்கள் சந்திக்கும் பௌதீக வள குறைபாடுகள், கல்விச் செயற்பாட்டில் உள்ள குறைபாடுகள், நிர்வாகப் பொறிமுறை என்பவைகளை பீடாதிபதி புண்ணியமூர்த்தி கடந்தவாரம் என்னை நேரில் சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அவைகளை நான் இன்று நேரில் பார்க்கிறேன்.
தமிழ்மொழி மூலமான சிறந்ததொரு கல்விக் கல்லூரியாக இது திகழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். பீடாதிபதி தெரிவித்திருந்த பல குறைபாடுகளை விரைவில் நீக்கித் தருவதோடு குறிப்பாக மாணவர்களின் தங்குமிடங்களை நிர்மாணிக்க நிதி ஒதக்கித் தருவேன். அது நிறைவேற ஒருசில மாத காலம் எடுக்கலாம், பொறுமை காக்க வேண்டும். வேலைகளை விரைவுபடுத்தி நிறைவாக்க வேண்டும் அது பீடாதிபதியின் பொறுப்பு என்றார்.
No comments:
Post a Comment