எதிர்காலத்தில் அமையவுள்ள தங்களது அரசாங்கத்தில், நாட்டிலுள்ள அனைவருக்கும் மத ரீதியிலான சுதந்திரம் அதிகமாக வழங்கப்படுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தோடு தாம் இனவாதிகள் அல்ல என்றும் எந்த இனம் அல்லது மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த நாட்டை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற எளிய அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எமது அரசாங்க காலத்தில், இந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழக்கூடிய வழிவகைகளை நாம் ஏற்படுத்துவோம்.
எதிர்காலத்தில் அமையவுள்ள எமது அரசாங்கத்தில், அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்குவதே பிரதானக் கொள்கையாக இருக்கும்.
நாம் கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு செயற்பாட்டை செய்திருந்தால், அது எமது தனிப்பட்ட தேவைக்காக அன்றி, நாட்டின் நலனுக்காக பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையிலேயே மேற்கொண்டிருந்தோம். பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நாம் இதனை செய்திருந்தோம்.
எனினும், எமக்கெதிராக பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போது அனைவருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது. நாம் இனவாதிகள் அல்ல” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment