ஜனாதிபதி செயலகம், அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினரைத் தாக்கும் வகையிலான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிடுகின்ற நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஒன்றிணைந்தே பதவியில் அமர்த்தினோம். அவருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்ததுடன், நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும் கடந்த ஒக்டோபர் மாதம் எமக்கும், அவருக்கும் எதிராக இருந்த அரசியல் அணியுடன் இணைந்து இந்நாட்டில் அரசியல் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கான முயற்சியினை மேற்கொண்டார்.
ஆனால் அந்த முயற்சி நீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டதுடன், நாங்கள் மீண்டும் எம்முடைய அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனாலும் ஜனாதிபதி தற்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அதன் தலைவர்களை தாக்கும் வகையிலான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.
எனவே எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் அமைச்சு உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment