ஐ.நா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் தட்டிக் கழிக்கும் போக்கே காணப்படுகின்றது. இதனால், கால நீடிப்பு வழங்கப்படக் கூடாது என ரெலோ அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் எல்லாம் ஐ.நா சபையின் கூட்டத் தொடரில் கால அவகாசம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், இதனை நாம் தேர்தலுக்காக செய்வதாக கஜேந்திர குமார் கூறி வருகின்றார். எங்களைப் பொறுத்தவரை ஐ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.
இன்றைய கால கட்டத்தில் தற்போது நடைபெறும் ஐ.நா சபையில் இலங்கை தொடர்பான கருத்துகளைக் கூறுவது ஒரு எதிர்பார்ப்புடன் இல்லை. ஐ.நா தீர்மானங்களில் பல தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதைத் தட்டிக் கழிக்கும் செயற்பாடே காணப்படுகின்றது.
இப்பொழுது ஜனாதிபதி தாம் விசாரிப்பதாக, நடைமுறைப்படுத்துவதாக இணங்கிக் கொண்ட விடயங்களில் இருந்து விலகிக் கொள்ளப்போவதாகக் கூறுகின்றார். ஆனால், நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் வழங்கக் கூடாது என வலியுறுத்துகின்றோம். இதில் எந்த உள் நோக்கமும் இல்லை.
எங்களைப் பொறுத்த வரை எங்கள் மக்களது விடுதலை, பிரச்சினைகள் வெல்லப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம். எங்கள் மக்களது பிரச்சினைகளை நாம் சர்வேதேசத்திற்குத் தெளிவாகச் சொல்லி வருகின்றோம். அதேபோல் ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் பொறுப்பு கூற வேண்டும்.
அந்த வகையில் கால நீடிப்பு என்பது இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற செயற்பாடாக மாறும். அழுத்தங்கள் தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும், கால நீடிப்பு வழங்கக் கூடாது என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) எல்லா தமிழ் கட்சிகளுடனும் பேசி வருகின்றது.
ஒற்றுமையாக எல்லா தமிழ் கட்சிகளும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எமது அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளாது நாம் இதனை தேர்தலுக்காக செய்வதாக கூறுவது பொருத்தமற்றது. கவலையான விடயம். ஆகவே அனைவரும் ஒற்றுமையாக இந்த விடயத்தில் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment