வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிறுவனங்களின் புத்தகங்கள், வெளியீடுளை நேரடியாக விற்பனை செய்யப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி சார்ந்த சகல உயர் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது வடக்கு மாகாணப் பாடசாலைகளில் பல்வேறு நிறுவனங்களின் வெளியீடுகள், புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது பாடசாலைகளில் அதிகமாக நடைபெறுகிறது. இந்த வெளியீடுகள் சில வேளைகளில் பாடப் பரப்புக்கு மேலதிகமாக மாணவர்களுக்கு சுமையாகவும் அமைகிறது.
கல்வி அமைச்சு ஆசிரியர் கைநூல் உட்பட்ட அனைத்துப் புத்தகங்களையும் மாணவர்களின் கல்வி மட்டத்துக்கு ஏற்ப அச்சிட்டு வெளியிடுகிறது. சில பாடசாலைகளில் இந்த வெளியீட்டு நிறுவனத்தின் புத்தகங்களை வாங்குமாறு சிலர் மாணவர்களுக்குத் தெரிவிக்கின்றனர்.
கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களத்தால் போதியளவு பயிற்சி மீட்டல்கள், பரீட்சைக்கு தயார்படுத்தல் வினாக்கள் போன்றன வெளியீடு செய்யப்படுகின்றன. இவை மாணவர்களுக்குப் போதுமானதாக அமைகிறது.
ஆகவே, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் அரசால் வெளியிடப்படும் வெளியீடுகளைத் தவிர நிறுவனங்களால் வெளியிடப்படும் புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் நேரடியாகப் பாடசாலைகளில், முன்பள்ளிகளில் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment