மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் இறப்பிற்கான காரணங்களை இனங்கண்டு தீர்வு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து செங்கலடி நகரில் புதன்கிழமை (06) ஆர்பாட்டப்பேரணி நடைபெற்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி ஸோபா ஜெயரஞ்ஜித், மாநகர சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் கால்நடைகள் அதிகம் இறந்துள்ளன. இதற்கான காரணங்கள் பல கூறப்பட்டு வந்தாலும், கால்நடைகளின் இறப்பு தொடர்ந்து கொண்டே காணப்படுகிறது.
மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் தரைப்பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலுள்ளது. இதனால் கால்நடைகள் சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுவதற்கு வன இலாகா அதிகாரிகள் தடை விதித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆராய்ந்து கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் அடையாளப்படுத்தி வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.
கால்நடைகளின் நீர்த் தேவையினைப் பூர்த்தி செய்ய நீர்த் தடாகங்கள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும்.
கால்நடைகளின் இறப்பு தொடர்பாக ஆய்வு செய்து, மருத்துவ வசதிகளை ஏற்படுத்த விஷேட திட்டம் உருவாக்க வேண்டும்.
பண்ணையாளர்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு வாரத்தில் இரு நாட்கள் கள விஜயம் மேற்கொள்ளக் கூடியளவிற்கு செயற்றிட்டம் உருவக்கப்பட வேண்டும்.
கால்நடைகள் இறப்பது தொடர்பாக பூரணமான ஆய்வினை மேற்கொள்வதற்காக கிழக்குப் பல்கலைக்கழக துறைசார் நிபுணர்கள் குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பண்ணையாளர்கiளின் கண்ணீரைத் துடைக்கவும் வேண்டும், நஷ்டயீடு வேண்டும். எமது நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய பங்கு கால்நடை வளர்ப்பாளர்களே, மேய்ச்சல் தரையை அடையாளப்படுத்துங்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு வட்டியில்லாக்கடன் வழங்க வேண்டும், எங்கள் நோக்கம் கால்நடைகளை அழிவிலிருந்து காப்பதே, மந்தைகளை காப்பாற்றாத நீங்கள் மனிதர்களைக் காப்பாற்றுவீர்களா? போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பவதாரணி கோபிகாந்திடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பவதாரணி கோபிகாந் ஆர்ப்பாடக்காரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கையெடுக்கப்படும். பிரதேச செயலகத்திற்கு ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்றார்.
No comments:
Post a Comment