எஸ்.அஷ்ரப்கான்
அம்பாரை மாவட்டம். சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அனுமதிக் கடிதத்தினை கல்வியமைச்சு வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே அல்-மர்ஜான் முஸ்லிம் பெண்கள் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை கல்வி வலயத்தில் 71 பாடசாலைகள் உள்ள நிலையில், இவ்வலயத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு ஒரேயொரு தேசிய பாடசாலை மாத்திரமே காணப்படுகிறது.
எனவே, இன்னுமொரு தேசிய பாடசாலையின் அவசியம் குறித்து சம்மாந்துறை பிரதேச உலமாக்கள், கல்வியலாளர்கள், அமைப்பாளர் ஹசன் அலியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்தே அவர் குறித்த பாடசாலையினை தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதன் நிமிர்த்தம் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினை நேரில் சந்தித்த ஹசன் அலி, அல் மர்ஜான் பெண்கள் கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அப்பாடசாலையானது, மாகாண சபையின் அதிகாரத்தின் கீழிருப்பதனால் மாகாண சபையின் அனுமதியினைப் பெற்றுத்தருமாறு கல்வியமைச்சர் அப்போது கேட்டுக் கொண்டார்.
அதற்கிணங்க, மாகாண அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகளையும் அவர் சந்தித்து, அல்-மர்ஜான் கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுவதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தி அதற்கான அனுமதியினையும் கோரினார்.
இது விடயமாக கவனத்திற் கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகள் அதற்கான அனுமதியினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
அதன் பிரகாரம் கிடைக்கப் பெற்ற அனுமதியின் பின்னர் 2019.03.01ஆம் திகதி முதல் குறித்த பாடசாலை தேசிய பாடசாலையாகச் செயற்படும் வண்ணம் அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த பாடசாலையினைத் தரமுயர்த்துவதற்கு உதவிய கல்வியமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர், அமைப்பாளர் ஹசன் அலி உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளுக்கும் சம்மாந்துறை பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-மர்ஜான் கல்லூரரியில் சுமார் 1500 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அத்துடன், இப்பாடசாலை கடந்த காலங்களில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் என சகல துறைகளிலும் முன்னேற்றங்கண்டு, தேசிய ரீதியில் பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது. இதற்கு அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்களின் அர்ப்பணிப்புக்களே பிரதான காரணமாகும்.
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம், பொத்துவில் மத்திய கல்லுாரி ஆகிய கிழக்கு மாகாண நிருவாகத்திற்குட்பட்ட பாடசாலைகள் சில அண்மையில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment