தெற்கு பாடசாலைகளில் காணப்படும் இலஞ்ச மாபியாவை தோற்கடிப்பேன், 37 பாடசாலைகளில் இலஞ்சம் பெறப்படுகிறது - ஆளுநர் கீர்த்தி தென்னகோன் - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

தெற்கு பாடசாலைகளில் காணப்படும் இலஞ்ச மாபியாவை தோற்கடிப்பேன், 37 பாடசாலைகளில் இலஞ்சம் பெறப்படுகிறது - ஆளுநர் கீர்த்தி தென்னகோன்

தெற்கிலுள்ள பாடசாலைகளில் காணப்படும் லஞ்ச மாபியாவை தோற்கடிக்க சகல நடவடிக்கைகளும் எடுப்பதாக தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். 

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக லஞ்சம் பெறுவதற்கு எதிராக தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், 37 பாடசாலைகளில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 5 இலட்சம் ரூபா முதல் 10 இலட்சம் ரூபா வரை லஞ்சம் கொடுத்தும் மாணவர்களை சேர்க்க முடியாத நிலை இருக்கிறது. குறித்த பிரபல பாடாசலைக்கு அடுத்த வேலியில் இருக்கும் மாணவனுக்கு இடம் கிடைக்க வேண்டும். தெற்கில் பாடசாலை அனுமதி கிடைக்காத 207 மாணவர்களுக்கு எவ்வாறாவது பாடசாலையொன்றை பெற்றுக் கொடுப்பேன். 

தெற்கு மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பேன். மோசடி காரர்களை பாதுகாக்க முயலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை கண்டு நான் அஞ்ச மாட்டேன். 

தெற்கிலுள்ள 37 பாடசாலைகளில் லஞ்சம் பெறுபவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களை நியாயமாக சேர்ப்பதற்கு ஆவண செய்யுமாறு லஞ்ச ஊழல் அதிகாரிகளை அழைத்து கோரியுள்ளேன். அவ்வாறு நியாயமாக நடக்காத ஒரு அதிபர் ஒரு இலட்சம் ரூபா லஞ்சம் பெறுகையில் பிடிபட்டார். இதற்கு தரகராக உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் செயற்பட்டிருந்தார். 

காலி சவுத்லண்ட் கல்லூரிக்கு முதலாம் வகுப்பிற்கு மாணர்வகளை இணைத்தது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளரை எழுத்துமூலம் கேட்டுள்ளேன். ஆவணங்களை பரீட்சிக்கும் போது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குழப்பமடைவார்கள். 

காலியிலுள்ள மற்றொரு பிரபல பாடசாலையில் இருந்து 250 அடி தூரத்தில் இருக்கும் 7 பிள்ளைகளுக்கு பாடசாலை கிடைக்கவில்லை. ஆனால் 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரினாலும் 6 வாரங்கள் கடந்துள்ளது. உரிய முறைமையின் கீழ் பாடசாலைக்கு மாணவர்களை இணைக்க வேண்டும்.

தெற்கு பாடசாலைகளில் காணப்படும் லஞ்ச மாபியாவை தோற்கடிப்பேன். காலியிலுள்ள வறிய மாணவர்கள், பக்கத்து வேலியில் வாழும் பிள்ளைகளுக்கும் கல்வி உரிமை இருக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment