மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (16) காலை 9 மணிக்கு இரணைஇலுப்பைகுளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ‘சுகாதார அமைச்சே எமது சுகாதாரம் காக்க வைத்தியரை நியமனம் செய்’, ‘பிரதேச மக்கள் உயிரில் விளையாட்டு வேண்டாம் எமக்கு வைத்தியர் வேண்டும்’ உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு, கடந்த ஒரு மாதகாலமாக தமது வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்கப்படவில்லை என்றும், இதனால் மாதாந்த மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ளும் 200இற்கும் மேற்பட்டோர் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த போதும் அவர் தற்போது இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என்றும், மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது முதல் நிரந்தரமாக ஒரு வைத்தியர் நியமிக்கப்படவில்லை எனவே தமது நிலையை அறிந்து வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்பகுதியால் சென்ற குறித்த வட்டாரத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர், தனது வாகனத்திலிருந்து இறங்காமல் ஆர்ப்பாட்டகாரர்களுடன் சில வினாடிகள் உரையாடிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment