ஞானசாரவின் விடுதலையை உறுதிப்படுத்திய ஹனிபா மதனி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

ஞானசாரவின் விடுதலையை உறுதிப்படுத்திய ஹனிபா மதனி

ஹனிபா மதனி அவர்கள் எழுதிய கடிதத்தினையும், அதன் எதிர்வினையையும், அந்த கடிதத்தின் பொருளடக்கம் தொடர்பில் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை மற்றும் பேச்சுக்களையும் பார்க்கவும் கேட்கவும் கிடைத்தன. அவரின் குடும்பத்தை இழுத்து எதிர்வினை செய்யப்படுவதை அவர் கவலையோடு கூறியுள்ளார். உண்மையில் அது தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட விடயங்களை பொது தளங்களில் இழுப்பது அசிங்கம். நாகரிகமற்றது. எனவே அதனை தவிர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால், அவரின் கடிதம் கண்டபோது உடனடியாக மனதில் பட்ட விடயம், பல்கலைக்கழக மாணவர் கைதும் சிறையடைப்பும்தான். அதற்காக இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கக்கூடாதா என்ற எண்ணம் பிறந்தது. பின்னர் வாசித்துக்கொண்டே போனபோது, பல்கலைக்கழக மாணவர் விடுதலை பற்றி எழுதவே மாட்டார் என்று எண்ணத்தோன்றியது.

அவரின் ஜனாதிபதியை “தாஜா” பண்ணும் வரிகள், காக்கா பிடித்து காரியம் சாதிக்க முனைவதாக அமைந்திருந்தன. அதனால், நீதி எல்லோருக்கும் சமமானது பெரும்பான்மையினர் எத்தனையோ பேர் கூட இது போன்ற புராதன இடங்களில் தாறுமாறாக போட்டோக்கள் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்ற போது முஸ்லிம் மாணவர்கள் மாத்திரம் ஏன் தண்டிக்கப்பட வேண்டுமென தைரியமாக கேட்கும் திராணி அவரிடம் இல்லை என்று விளங்கியது. அதனால், பல்கலைக்கழக மாணவர் விடுதலை பற்றி எழுதவே மாட்டார் என தோன்றியது.

அவரது கடிதம் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது. “வெற்றெனத் தொடுத்தல்” எனும் கோட்பாட்டிற்கமைய, சம்மந்தமில்லாத விடயதானங்கள் தவறாக பிணைக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

ஒன்றை அடைய கையாளப்பட்ட மற்ற விடயம் அடைய நினைத்ததை விட தீங்கானதாக அமைந்திருக்கிறது. அவர் பேச நினைத்ததை விட “மற்றொன்று விரித்தல்” என்பதே அதிகமான பொருளடக்கமாக இருக்கின்றன. வீட்டைக் காப்பாற்ற நாட்டை எரிக்க முனைவது போல் உணரப்படுகிறது.

மெல்ல வாசிக்க நகர்ந்த போது “சொர்க்கத்தை அடைய நரகத்தில் சங்கமாக அழைப்பதை” ஒத்ததான விடயத்தை அவர் உதவிக்கு அழைப்பதை சகிக்க முடியாது இருந்தது. குறிப்பாக ஞானசாரவை விடுதலை செய்துதான் நுரைச்சோலை வீட்டைப் பெற வேண்டுமாயின், அந்த வீடுகளை உடைத்து தரைமட்டமாக்கிடலாம் என்று மனதில்பட்டது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து ஞானசாரவின் விடுதலையில் விமோசனம் தேடுவதாக எண்ணத்தோன்றியது.

அதிலும் சமூகத்தின் சார்பில் ஞானசாரவின் விடுதலைக்காக மன்றாடும் அவரின் வரிகள்; காதில் பழுக்கக் காய்ச்சிய ஈயமாகப் பாய்கின்றன. நுரைச்சோலை பற்றி நானும் பேசினேன் என்ற விளைவுகளற்ற ஒரு அரசியல் கணிதத்திற்கு; ஞானசாரவின் விடுதலை எனும் சமன்பாட்டை விடையாக கூற முற்படுவது; எவ்வளவு அறியா நிலை என்பதை அவர் உணரவில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம் கடிதம் எழுத கருப்பொருள் மாத்திரம்தான். அதன் பக்கவிளைவுகள் பற்றி பக்கா அக்கறை அற்றவர். அவர் அவ்வளவுதான்.

முஸ்லிம்களின் விடயத்தில் ஞானசார சிறையிடப்படவில்லை. அவர் நீதிமன்றை அவமதித்த காரணத்தால் சிறையிடப்பட்டுள்ளார். அதுவும் சாட்சியான பெரும்பான்மை இன விதவைப் பெண்ணை நீதிமன்றில் நீதிபதி முன்னிலையில் மிரட்டியதற்காக சிறையிடப்பட்டுள்ளார். நீதிபதியே நேரடியாக சாட்சி சொல்லி சிறையிலடைத்துள்ளனர். இதில் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன தொடர்பு? அவரை விடுதலை செய்யக்கோருவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு என்ன தேவை? எச்சிலுக்காக நாம் ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டும்?

ஞானசாரவை விடுதலை செய்தாவது நுரைச்சோலை வீடுகளைப் பெற்றுத்தாருங்கள் என்று மதனியிடம் யாரும் வந்து அழுதார்களா? ஞானசார இல்லாமல் எங்களால் வாழ முடியாது என்று முஸ்லிம் சமூகத்தில் யாரும் சொன்னார்களா? ஞானசார இல்லாமல் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதா? ஞானசார இல்லாமல் இந்த நாட்டில் முஸ்லிம்கள் யாரும் மதம் மாறினார்களா? எதற்காக ஞானசாரவை விடுதலை செய்யக்கோர வேண்டும்? என்பதை தெளிவாக கூற வேண்டும்.

ஆனால், தெளிவான பதிலைக் கூற அவரிடம் பதில் இருக்கவில்லை. மழுப்பலும்; இழுத்தலுமே மயக்க விடையாக கிடைத்தன. அரசியல் நோக்கத்தில் உள்ளத்தில் “ஹக்கூ” இல்லாமல் எழுதப்பட்ட கடிதம் அது. அது தவறானது என்பதை அல்லாஹ் வெளிச்சங்காட்டி இருக்கிறான். அல்லாஹ்வை யாரும் ஏமாற்ற முடியாது என்பதற்கு அல்லாஹ் பதிலிறுத்திருக்கிறான்.

இனி அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், முஸ்லிம் சமூகத்தின் அங்கிகாரத்தோடும்தான் நான் ஞானசாரவிற்கு பொதுமன்னிப்பு வழங்கினேன் என ஜனாதிபதி கூற வழிதிறந்து கொடுத்துள்ளார். எழுத்து மூலம் அங்கிகாரம் வழங்கியுள்ளார்.

என்னை பௌதர்களும் இந்துக்களும் முஸ்லிம்களும் கேட்டுக்கொண்டதால், மூவின மக்களின் வேண்டுகோளையும் தட்டிக்கழிக்க முடியாத தர்மசங்கடத்தில் நான் ஞானசாரவை விடுதலை செய்தேன் என்ற அறிவிப்பு, சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதிடமிருந்து வரப்போவதை எதிர்பார்த்து காத்திருக்க முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும்.

அதற்கான முன்னறிவிப்பே ஹனிபா மதனியின் கடிதத்திற்கு சிங்கள இனவாத ஊடகங்களின் முன்னிலைப்படுத்தல் என்பதை இலகுவாக புரிந்துகொள்ளலாம்.

அப்புறம் என்ன? ஒருபக்கம், ஞானசார ஹனிபா மதனியின் ஆசிர்வாதத்தோடும் முஸ்லிம் சமூகத்தின் அங்கிகாரத்தோடும் வெளியே வந்து சிறை வாசலில் நின்ற வண்ணம் சண்டித்தனத்தோடு அறிக்கைகளை விடப்போகிறார்.

மறுபக்கம், ஞானசாரவின் விடுதலைக்காக முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்தை வழங்கிய ஹனிபா மதனியின் மனதில் பெரும் சுமை குறைந்ததாக பெருமூச்சு விடப்போகிறார்.

நாம் என்னதான் செய்ய முடியும்? ஹனிபா மதனியின் முஸ்லிம் சமூக அங்கிகார கடிதத்தால் முஸ்லிம்கள் படப்போகும் துன்பங்களை நினைத்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதை தவிர.

ஹனிபா மதனியின் பெருமனம் முஸ்லிம் சமூகத்தில் வேறு யாருக்குத்தான் வரும். வாழ்க வளமுடன்.

ஏ.எல்.தவம்
முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

No comments:

Post a Comment