தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவிட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா ராவிராஜ் தாக்கல் செய்துள்ள இந்த மனு இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்த ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இன்றைய வழக்கில் பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாரச்சி என்பவர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது, தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் தன் சார்பாக சட்டத்தரணி ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்கு தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்குமாறு பிரசாத் ஹெட்டியாரச்சி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி வழக்கை ஏப்ரல் மாதம் 04ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் சட்டத்தரணி ஒருவரை பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூரிகள் சபையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைவாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குறித்த கடற்படை வீரர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று உத்தரவிடுமாறு இந்த மேன்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment