போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை! அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை! அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

“மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொலிஸார், விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகின்றதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம்.” – என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (01.12.2018) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:- “ஆண் மாணவர்கள் மற்றும் அவர்களோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கட்டியெழுப்புவது என்பது இலங்கையில் மாத்திரமல்ல முழு உலகத்திலும் சவால் நிறைந்த ஒரு விடயமாகும். கொழும்பிலுள்ள பல முன்னணி ஆண் பாடசாலைகள் பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே தமது பாடசாலையின் தரத்தை காத்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 
இப் பாடசாலையின் ஒழுக்கம், கல்வி, பௌதீக வளங்களை வளர்ப்பதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் என பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். என்றாலும் பாடசாலையின் கௌரவத்தையும், செல்வாக்கையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களிடமே உள்ளது. உங்களைப் பார்த்துத்தான் பாடசாலை தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. 

காத்தான்குடி மத்திய கல்லூரி ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முன்னணி தரம்வாய்ந்த பாடசாலையாக இருந்தது. பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் இங்கு வந்து கற்றவர்கள் இன்று சிறந்த கல்விமான்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கின்றனர். மீண்டும் அந்த தரத்துக்கு இந்த பாடசாலையைக் கொண்டு செல்வதற்கு மாணவர்கள் தான் அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

மாணவர்களது செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் மாற்றமடைய வேண்டும். இன்று பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண் பாடசாலைகளை இலக்காக வைத்து போதைப் பொருள் வியாபாரம் நடக்கின்றது. நீங்கள் அறியாமல் செய்யும் தவறு உங்களது குடும்பம் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் உங்களது எதிர்காலத்தையும் பாதிக்கும். 
காத்தான்குடி போன்ற முஸ்லிம் ஊர்களில் மதுபானசாலைகள் கிடையாது. நாங்கள் மது அருந்துவதில்லை என்று பெருமையாக கூறினோம். ஆனால், இன்று மதுவை விட மோசமான போதைப் பொருட்கள் நமது சமூகத்துக்கு மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது. 

போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொலிஸார், விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகின்றதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம். என்றாலும் எம்மால் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. மாணவர்களாகிய நீங்கள் தான் அவற்றிலிருந்து விடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளை மாணவர்கள் எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் கல்வி வளர்ச்சியில் இலங்கையில் முதலிடத்தில் இருந்தது. க.பொ.த. சாதாரண தர பரீட்சை சித்தியடைந்த வீதத்தில் தொடர்ந்தும் மூன்று ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அது இன்று பின்னடைவை சந்தித்துள்ளது. 
பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாகவும் - கவனமாகவும் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த மாணவர்களே எமது சமூகத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர்கள். 

காத்தான்குடி மத்திய கல்லூரி அபிவிருத்திக்கு நான் தொடர்ந்தும் தம்மாலான உதவிகளை செய்யவுள்ளேன். எதிர்காலத்தில் பாடசாலையின் பௌதீக வள குறைப்பாடுகளை நீக்கப்பட்டு தரம் வாய்ந்த பாடசாலையாக மாற்றியமைக்கப்படும். அத்துடன், பாடசாலை அதிபரின் செயற்திட்டங்களை பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம் என்பவற்றுடன் கலந்தாலோசித்து அதனை பூர்த்தி செய்ய எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன்.” – என்றார்.

No comments:

Post a Comment