டிசம்பர் 31க்குள் தீர்வின்றேல் கூட்டமைப்பு அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ்பெற வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

டிசம்பர் 31க்குள் தீர்வின்றேல் கூட்டமைப்பு அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ்பெற வேண்டும்

அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை எதிர் வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அரசு முன்வைக்கத் தவறும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெலோ இயக்கத்தின் 10வது தேசிய மாநாடு மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அரசியல் தீர்வுத்திட்டமொன்றினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அரசு முன்வைக்க தவறும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அளிக்கப்பட்டு வரும் ஆதரவினை முடிவுறுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுறுத்தப்பட்டு 9 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அரச படைகள் நிலைகொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

படைக்குறைப்பை திட்டவட்டமானதும் நீதியானதுமான கால வரையறைக்குள் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி 1981ம் ஆண்டில் இருந்த நிலைக்கு படைகளின் பிரசன்னத்தை மட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் வட கிழக்கில் அரச படைகள் தொடர்ந்து பாரிய எண்ணிக்கையில் ஆக்கிரமிப்புப் படைகளாக நிலை கொண்டிருப்பதையும் பாதுகாப்பு படையினருக்கான செலவீனங்கள் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் மாத்திரமில்லாமல் சிங்கள மக்களையும் பாதிக்கும் வகையில் தேசிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படுத்துவதையும் கருத்திற் கொண்டு எதிர் வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் 107 பேர் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. மனிதாபிமானமின்றி இப் பிரச்சினைகளை கையாள்வதைக் கண்டிப்பதோடு காலதாமதமின்றி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கோருகின்றது.

அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரே அணியாக அணி திரள முன் வருமாறு சகல அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்களையும் இந்த மாநாடு அழைக்கின்றது.

போர்க்குற்ற விசாரணை விடயத்தில் தமிழ் இனத்தின் தரப்பில் எந்த விதமான விட்டுக் கொடுப்புக்கோ சமரசத்திற்கோ இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இத் தேசிய மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளையும் பொறுப்புக்களையும் காலம் கடத்தாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றம் வலியுறுத்தி உறுதிப்படுத்த வேண்டும்.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசாங்கம் தனது கடப்பாடுகளை ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை அமுல் படுத்த தவறுமிடத்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என்று மாநாடு ஐக்கிய நாடுகள் சபையை கோருகின்றது போன்ற தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறீகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், உப தலைவர்களான பிரசன்னா இந்திரகுமார், ஹென்ரி மோகன், பொருளாளர் கோவிந்தன் கருணாகரன் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் தவிசாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment