சர்வதேச சுனாமி ஒத்திகை இன்று 5 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இம்மூன்று மாவட்டங்களிலுமுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் ஒரே நேரத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படவுள்ளது. இதனால் பொதுமக்கள் கலவரப்படத் தேவையில்லை என்றும் எந்தளவுக்கு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்பதை அறியும் நோக்குடனேயே என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் 23 நாடுகள் இன்றைய சுனாமி எச்சரிக்கை ஒத்திகையில் கலந்துகொள்கின்றன. சர்வதேச மட்டத்தில் நடத்தப்படும் இம்முன்னெச்சரிக்கை ஒத்திகையில் கலந்துகொள்வதன் ஊடாக இந்த நாட்டில் அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சர்வதேச மட்டத்தில் மதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய சுனாமி ஒத்திகை, ஒரு பாடசாலை, ஒரு சுற்றுலா ஹோட்டல், ஒரு கிராமசேவகர் பிரிவு, மத வழிபாட்டுத்தலம் என்பவற்றை உள்ளடக்கியதாக நடத்தப்படவுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இணைத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் முப்படையினர், பொலிஸ் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, மாவட்ட செயலகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.
காலி மாவட்டத்தில் சுனாமியால் வெகுவாக பாதிக்கப்பட்ட கதிர்கமுவ பிரதேச செயலக பிரிவிலுள்ள மூன்று முன்னெச்சரிக்கை கோபுரங்களை தொடர்புபடுத்தி முன்னெடுக்கப்படும் என காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் லெப்டினன் கர்னல் தம்பத் ரத்னாயக்கா தெரிவித்தார்.

No comments:
Post a Comment