முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த அரசு ஏற்படுத்தத் தவறுமானால், இந்த மக்களோடு சேர்ந்து அவர்களின் உரிமைக்காக போராடுவதைத்தவிர வேறு வழி எதுவுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவிததுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடியைத்தடுத்து நிறுத்தக்கோரி தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்த மீனவர்கள் நேற்று (02) கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன், நீரியல் வளத்திணைக்களத்தினையும் முற்றுகையிட்டு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை அப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் கலந்து கொணடிருந்தனர்.
இது தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்து தமது வாழ்வாதாரத் தொழிலுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது.
இதனையடுத்து, இந்த நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா .சம்பந்தன் மற்றும் கடற்தொழில் அமைச்சர், ஆகியோருடன் தொலைபேசியில் உடனடியாக தெரியப்படுத்தியிருந்தேன்.
அதனையடுத்து, கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கினிகே ஜனகபிரசன்ன குமார அவர்களிடம் இருந்து கடிதம் ஒன்று தொலைநகல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்தக்கடிதத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடும் கடற்தொழிலாளர்கள் மற்றும் ஏனைய கடற்தொழிலாளர்களுக்கும் இடையில் காணப்படுகின்ற பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல ஒன்று கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தலைமையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் எதிர்வரும் 8ம் திகதி 11.30 மணியளவில் கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் கருத்தரங்குக்கூடத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றும் பொருட்டு கடற்தொழிலாளர்கள் சார்பாக பத்துப் பிரதிநிதிகள் தொடர்பாக அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
நான், குறித்த சந்திப்பினை முல்லைத்தீவிலே நடத்துமாறு அமைச்சர் அவர்களிடம் கேட்டிருந்தேன். மேற்படி கூட்டத்தினை நடத்திவிட்டு அந்தக் கூட்டத்தில் திகதி ஒன்றை அறிவித்து அதன்படி இங்கு வந்து மீனவர்களுடன் கலந்துரையாடுவதாக அமைச்சர் குறிப்பிட்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இருந்தபோதும், மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார்கள். இந்த மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல தடவைகள் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றேன்.
இதைவிட சம்பந்தப்பட்ட அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கூட இந்தப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்திருக்கின்றேன்.
ஆனால் அந்த மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. யுத்தத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் அதன் பின்னரான யுத்தத்தினாலும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு பெரும் இழப்புக்களைச் சந்தித்து வாழ்கின்ற இந்த மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு உரிய வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மீனவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த அரசு ஏற்படுத்தத் தவறுமானால் இந்த மக்களோடு சேர்ந்து அவர்களின் உரிமைக்காக போராடுவதைத்தவிர வேறு வழி எதுவுமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடரான செய்திக்கு
https://www.newsview.lk/2018/08/blog-post_76.html
No comments:
Post a Comment