‘சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குச் செல்லும் பெண்களுக்கு எந்தவிதமான சமூகப்பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை’ இதனை மாதர் சங்கங்கள் பொது அமைப்புக்கள் பெண்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என மூதூர் பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் தெரிவித்தார்.
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோதமாக பெண்கள் பல தடைகளைத் தாண்டியும் சிறிய குழந்தைகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு செல்வதாக மூதூர் ஆலிம் நகர் மாதர்சங்க தலைவி தெரிவித்தார்.
நேற்று (30) காலை 10.30 மணியளவில் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மக்கள் குறைகேள் மன்றம் பிரதேச செயலாளர் முன்நிலையில் நடைபெற்றது. இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாதர் சங்க தலைவி இவ்விடயத்தை சுட்டிகாட்டியதுடன் இதனால் பெண்கள், குழந்தைகள் பல்வேறு வகையில் பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு செல்பவர்களை தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்வாறான கோரிக்கையை பலரும் முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த பிரதேச செயலாளர் கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் பல்வேறு தரப்பட்ட அதிகாரிகளும் இங்கு கலந்துகொண்டுள்ளீர்கள்.
பெண்கள் சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வதனால் எவ்வித சமூகப் பாதுகாப்பும் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை. இவ்வாறான செயலை போலிமுகவர்கள் செய்கின்றனர். பலர் சுற்றுலா விசாவில் செல்கின்றனர். அதனை நாம் தடுக்க முடியாது.
சட்ட விரோதமாக செல்ல முயற்சிக்கும் தகவல்கள் தெரிந்தால் உடன் எமக்கு தெரியப்படுத்துங்கள் நாம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிப்போம். அதுமட்டுமன்றி நீங்கள் கிராம மட்டத்தில் பொதுமக்களுக்கு இது குறித்து தெளிவு படுத்துதல் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இங்கு 180 பேர்வரை கலந்துகொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகளும், பிரதேச செயலக சகல மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் நிகழ்வை இலகுபடுத்தியதுடன் மனித உரிமைகள் தொடர்பான அடிப்படைச் சட்டங்களையும் தெளிவு படுத்தினார்.
சம்பூரில் பலகுளங்கள் மற்றும் மக்களுக்கு சொந்தமான காணிகள் முன்னைய அரசால் எடுக்கப்பட்டன. அவற்றில் பல இன்னும் விடுவிக்கப்படவில்லை. மாறாக நஸ்ட ஈடும் வழங்கப்படவில்லை. குடியேற்றப்பட்ட பல காணிகளுக்கு முறையான ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. மீழக்குடியேறிய மக்களுக்கு முழுமையாக வீடுகள் வழங்கப்படவில்லை. வருவது மழைக் காலமாகையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. என சம்பூர் மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மணற்சேனை வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்காமையினால் மக்கள் சிரமப்படுகின்றனர். காட்டு யானையினால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளன. சட்டவிரோத மண்ணகழ்வு தொடர்கின்றன. என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வி.மோகன் தெரிவித்தார்.
பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம், வீட்டுப் பிரச்சனைகளுக்கு விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் அவர்களுக்கும் பள்ளியிடும் முறமை மேற்கொள்வது கவலையளிக்கிறது. எனவும் பெண்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.
அகம் அமைப்பு இணைப்பாளர் த. திலீப்குமார் தலமையில் இந்நிகழ்வு நடைபெற்றன. இங்கு கிராமங்களில் காணப்படும், காணி, வீடு, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.
No comments:
Post a Comment