சுமார் 15 நாடுகள் பங்கு பற்றுதலுடன் கடந்த 28.07.2018ம் திகதி சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினாடி வினாப்போட்டியில் (IMC) மெரிட் சித்தியைப் பெற்று தேசத்திற்கும் கல்குடா மண்ணுக்கும் பெருமை சேர்த்த ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி ஜுனைதீன் பாத்திமா இஸ்கா மற்றும் அவருக்கு கற்பித்து இந்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள வழிகாட்டிய ஆர்.ஜுனைதீன் ஆசிரியரையும் வாழ்த்தி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (03.08.2018) வெள்ளிக்கிழமை வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய அதிபர் எம்.ஸாபீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சர்வதேச கணித வினாடி வினாப்போட்டியில் (IMC) மெரிட் சித்தியைப் பெற்ற மாணவி பாத்திமா இஸ்கா மற்றும் இம்மாணவியின் வெற்றிக்கு சகல வழிகளிலும் அர்ப்பணிப்புடன் கற்பித்து வழிகாட்டிய ஆங்கில மொழி மூலம் கணிதப்பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஆர்.ஜுனைதீன் ஆகியோர் பாத்திமா பாலிகா பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க நிருவாகிகள் ஆகியோரால் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிப்பணிப்பாளர் VT.அஜ்மீர், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.கே.ரஹுமான், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.கான், பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் எம்.காதர் ஆசிரியர், ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவின் முன்னாள் அதிபர் ஏ.எல்.நெய்னா முஹம்மது ஆகியோரும் சாதனை மாணவியை இந்த மண்ணுக்கு தந்த தாயும் கலந்து சிறப்பித்தனர்.
சிறுவயதிலே தந்தையைப் பிரிந்த குறித்த மாணவி தாயின் பராமரிப்பில் பல்வேறு இன்னல்களைக் கடந்து தனது திறமையை வெளிக்காட்டி சாதனை புரிந்துள்ளார்.
சுமார் 15 நாடுகள் பங்கு கொண்ட மேற்படி போட்டியில் குறித்த மாணவி மாத்திரமே ஆங்கில மொழி மூலம் போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெற்றதுடன், இப்போட்டியில் வெற்றி பெற்ற ஏனைய மாணவ, மாணவிகள் தமது தாய்மொழி மூலம் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment