உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருடன் சில நிமிடங்கள் - பல்கழைக்கழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி - News View

About Us

About Us

Breaking

Saturday, August 4, 2018

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருடன் சில நிமிடங்கள் - பல்கழைக்கழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி

இந்த ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள கல்முனை சாஹிரா கல்லூரி உயர்தர மாணவர்களுக்கு விசேட சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கடந்த வாரம் எனக்குக் கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். வாய்ப்பளித்த பாடசாலை அதிபருக்கும், நீதிக்கும் சமாதானத்துக்குமான பேரவை உறுப்பினர்களுள் ஒருவரும், கல்லூரியின் பழைய மாணவருமான நண்பர் Kaleel Seeni Mohamed உட்பட அனைவருக்கும் நன்றிகள்.

அவர்களோடு பகிர்ந்தவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது சிலருக்குப் பயன்படலாம். பரீட்சை எழுதும் மாணவர்களில் கணிசமானோர் சமூக ஊடகங்களில் இல்லாவிடினும், பெற்றோர்  பாதுகாவலர் போன்றோருக்கு இவை பயன்படலாம்.

01. நேர அட்டவணை ஒன்று மிக அவசியம் :- பரீட்சை நெருங்கி விட்டதால் எந்தெந்த தினங்களில் எத்தனை எத்தனை மணிக்கு எவற்றை படிப்பது என்றொரு நேர அட்டவணை அவசியம். இது நேர விரயத்தையும், தேவையற்ற வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்கும்.

02. கடந்த கால வினாப்பத்திரங்களை அதிகம் படியுங்கள். அதில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மதிப்பீட்டு விடைகளில் (Answer Key) அதிக கவனம் செலுத்துங்கள். அதன்படி விடையளிக்கப் பயிற்சி எடுப்பதனால் பரீட்சையை எதிர்கொள்ளல்/விடையளித்தல் நுட்பங்களை விளங்கிகொள்ளலாம்.

03. அதிகமான வினாக்கள் வினவப்படும் பகுதிகளில் கூடுதல் கவனமெடுங்கள். அவற்றை உங்கள் ஆசிரியர்கள் அடிக்கடி உங்களுக்குச் சொல்லியிருப்பர்.

04. பரீட்சை பற்றிய பய உணர்வை இல்லாமல் செய்யுங்கள் :- சிலருக்கு பரீட்சை நெருங்க நெருங்க ஒருவித மனப்பயம் ஆட்கொள்ளக்கூடும். அவற்றை சட்டை செய்யாதீர்கள். எத்தனையோ பரீட்சை எழுதிவிட்டோம் – அதுபோன்றே இதையும் எதிர்கொள்வோம் என்கிற தைரியத்தை பலப்படுத்துங்கள். தன்னம்பிக்கையுடன் பரீட்சையை எதிர்கொள்வதால் மிக இலகுவாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.

05. இனி Hard Work இற்கு நேரமில்லை – தேவை Smart Work :- சுருக்கக் குறிப்புகள், மாதிரி வினாக்கள், கலந்தாலோசனை முறைகள் போன்றவற்றின் மூலம் பாடப்பரப்பை அணுகுவதே இனி இருக்கும் ஒரே வழி. சில கற்றல் நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். Kernell note taking ஒரு நல்ல வழி. (பல வினைத்திறனான கற்றல் நுட்பங்கள் பற்றி பலரும் அறிந்திருப்பீர். அவற்றைப் பிரயோகிக்கவும்).

06. சித்தி அடையக்கூடிய எந்தப் பெறுபேறு உங்களுக்குக் கிடைத்தாலும் உங்களால் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பைப்பெற முடியும். தவிர, அரச அங்கீகாரம் பெற்ற பல தரமான பட்டப்படிப்புகளையும் தொடர முடியும். எனவே அதுபற்றிய பய உணர்வு உங்களுக்குத் தேவையில்லை. உதாரணமாக கடந்த ஆண்டு Z-Score இன் படி பின்வரும் எண்ணிக்கையில் பல்கலை வாய்ப்புகள் காணப்படுகின்றன

கலை – 40 கற்கை நெறிகள் 
வணிகம் - 34 கற்கை நெறிகள் 
உயிரியல் - 60 கற்கை நெறிகள் 
பௌதீகவியல் - 49 கற்கை நெறிகள் 
பொறியியல் தொழினுட்பம் - 19 கற்கை நெறிகள் 
உயிர்முறைமைகள் தொழினுட்பம் – 18 கற்கை நெறிகள்

இந்த ஆண்டு இது இன்னும் அதிகரிக்கக் கூடும். தவிர கடந்த முறையை விட அதிக மாணவர்கள் இம்முறை சேர்த்துக்கொள்ளப்பட வாய்ப்புகள் உண்டு. ஆதலால், பல்கலைக்கழக நுழைவு பற்றிய அச்சம் தேவையற்றது. அதேபோன்று நல்ல பெறுபேறுகளுக்கு அரச அங்கீகாரம் பெற்ற அதிக கேள்வியுள்ள பல பட்டப்படிப்புகள் காணப்படுகின்றன.

07. பரீட்சை முடியும் வரை பெற்றோரும் பிள்ளைகளின் கற்றல்/உளவியல் விடயங்களில் கூடுதல் கவனம் எடுக்கவும். மனதளவில் பிள்ளைகளை தயார்படுத்தல், பிள்ளையின் கற்றலை தொடர்ச்சியாக அவதானித்தல் என்பன முக்கியம்.

08. ஒவ்வொரு பாடமும் நிறைவுற்ற பிறகு நடந்த பரீட்சை பற்றி நண்பர்களிடம் விவாதிப்பதை தவிர்க்கவும். வீட்டுக்கு வந்து சரியாக விடை எழுதியுள்ளோமா என்று மீண்டும் அந்தப் பாடங்களை வாசிக்க முனைவதையும் தவிர்க்கவும். நடக்கப்போகும் பாடங்களில் கவனமெடுக்கவும்.

09. Z-Score முறையில் பல்கலைக்கழக நுழைவு தீர்மானிக்கப்படுவதால் முடியுமானவரை பரீட்சை எழுதவும். ஒவ்வொரு புள்ளியும் மிக மிகப் பெறுமதியானது என்பதால் கேள்விகளை நன்கு விளங்கி திருத்தமாக விடையளிக்கவும்.

10. “இந்தப்பகுதி வராது – இந்தப்பகுதிதான் வரும் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்”. எல்லாப் பாடப்பரப்பையும் கடந்த கால வினாப்பத்திரங்களின் துணையுடன் விளங்கிக் கற்றுக்கொள்ளுங்கள்.

பரீட்சை ஒன்றும் பயங்கரமானது அல்ல. வாழ்வின் பல தடைகளில் இதுவும் ஒன்று. அவ்வளவே. மிக இலகுவான பரீட்சை ஒன்றையே நீங்கள் தோற்றப் போகிறீர்கள். எனவே அதற்காக திட்டமிட்டு, நல்ல முறையில் தயாராகி, பொருத்தமான வினாக்களுக்கு பொருத்தமான விடைகளை எழுதி அனைவரும் சிறந்த பெறுபேறுகளைப் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன். அனைவரையும் மனமார வாழ்த்துகிறேன்.

எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கழைக்கழகம்

No comments:

Post a Comment