என்னிடம் புதிய வியாபாரம் சம்பந்தமாக சூப்பர் ஐடியா இருக்கிறது. ஆனால், முதலீடுதான் இல்லை என்று கவலைப்படுகிறீரா ? வெளிநாட்டில் தொழில் செய்யும் நீங்கள் சுயதொழில் முயற்சியாளராக இலங்கையில் செட்டில் ஆக விரும்புகிறீரா?ஆரம்பித்த சுயதொழிலை முன்கொண்டு செல்ல மூலதனம் போதாமல் தடுமாறுகிறீரா? நீங்கள் ஒரு சுயதொழில் முயற்சியாளராவது பற்றி சிந்திக்கிறீரா? இதில் நீங்கள் யாராக இருந்தாலும் இந்தப்பதிவு உங்களுக்குத்தான்.
தொண்ணூறுகளின் இறுதியிலும், இரண்டாயிரத்தின் ஆரம்பத்திலும் தனியார் வானொலிகள் (சக்தி, சூரியன், சுவர்ண ஒலி), புதிய ஜனரஞ்சக பத்திரிகைகள் (இடி, சுடர் ஒளி) போன்றவற்றில் நாங்கள் தீவிரமாக இயங்கத் தொடங்கிய காலத்தில் எங்களில் சிலருக்குள் நல்லதொரு நட்பு உருவாகியிருந்தது. அப்படி 2000 ஆம் ஆண்டுகளில் எனக்கு புத்தளத்திலிருந்து அறிமுகமான ஒருவர்தான் Mohaamad Infaas.
அவரது அழைப்பின்பேரில் புத்தளம் நகரின் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், முயற்சியாளர்கள், இளைஞர்கள் போன்றவர்களுக்கு தொடக்க வணிகம் (Startup Business), முயற்சியாண்மை, துணிகர மூலதனம் (venture capital) ஆகிய விடயங்களை உள்ளடக்கி சிறப்பு கருத்தரங்கு ஒன்றை நடாத்த கடந்த சனிக்கிழமை (28) அங்கு சென்றிருந்தேன்.
மர்ஹூமா உம்மு நஸ்ரின் அமைப்பின் ஏற்பாட்டில் அவரது புதல்வன் சட்டத்தரணி முகம்மட் அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில் வர்த்தகர்கள், முயற்சியாளர்களாக முன்னேற விரும்புவோர், தொழில்சார் கற்கைநெறிகளை தொடர்வோர் என்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் மூன்று மணிநேரங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதோடு, புதிய பல சந்தைவாய்ப்புக்களும் இனங்காணப்பட்டன. இதில் கலந்துரையாடிய பல விடயங்களில் ஒரு சில விடயங்களை இங்கே குறிப்பிடுவது பயனுள்ளதாக இருக்கலாம்.
உங்களிடம் புதிய வியாபாரம் சம்பந்தமாக சூப்பர் ஐடியா இருக்கிறது. ஆனால், முதலீடுதான் இல்லை என்று கவலைப்படுகிறீரா ? சுயதொழில் முயற்சியாளராகும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? ஆரம்பித்த சுயதொழிலை முன்கொண்டு செல்ல மூலதனம் போதாமல் தடுமாறுகிறீரா? அப்படியாயின், உங்களுக்கு உதவ துணிகர மூலதனம் (Venture Capital) எனும் வட்டியற்ற நிதித் திட்டம் இலங்கையில் நடைமுறையிலுள்ளது. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
01. Lankan Angel Network(LAN)
இலங்கையின் ஆரம்பநிலையில் உள்ள தொடக்கநிலை வணிகங்களில் தேவதை என்று வர்ணிக்கப்படும் இவர்கள் முதலீட்டாளர்களையும் தனிநபர் முதலீட்டாளர்களையும் முதலீடு செய்ய ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இயங்குகிறார்கள்.. இவர்கள் தனித்து முதலீட்டு வசதிகளை மட்டுமே வழங்காமல் தங்கள் முதலீடுகளை பாதுகாக்கத்தக்க வகையில் வணிக முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கல், புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுக்க வழி ஏற்படுத்தல் என்பவற்றுடன் வணிக முயற்சியிலிருந்து வெளியேறும்வரை பொருத்தமான ஆலோசனைகளை வழங்கும் சேவைகளையும் வழங்குகிறார்கள்.
02. crowdlsland
இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களுக்கு புதுவகையில் முதலீடுகளை திரட்டி வழங்கவென உருவாக்கபட்ட தளம் இதுவாகும்.
இதில் நிதித் தேவைப்பாடு உடைய முதலீட்டாளர்கள் தங்களுடைய வணிகம் தொடர்பிலான விடயங்களையும்முதலீட்டளர்களுக்குத் தேவையான தகவல்களையும் குறித்த இணையத்தளம் வழியாக வழங்க வேண்டும். இதனை ஆய்வு செய்யும் நிறுவனத்தின் திறன் வாய்ந்த ஊழியர்கள் நம்பகதன்மை வாய்ந்த தொடக்கநிலை வணிகங்கள் தொடர்பிலான திட்டங்களை தங்களுடன் பதிவுசெய்து கொண்ட முதலீட்டாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இதன் மூலமாக முதலீட்டாளர்கள் குறித்த தொடக்கநிலை வணிகங்களின் பங்குகளை கொள்வனவு செய்வதன் மூலமாக நிதியினை பெற்றுக் கொள்ளமுடியும்.
03. idea2fund
இவர்களும் இலாபமீட்டக்கூடிய வியாபார சிந்தனைகளுக்கு முதலீடுகளை வழங்கும் இலங்கையின் முக்கிய நிறுவனமாவர். விவசாயம், கல்வி, எரிசக்தி, பொறியியல், நவநாகரீகம், நிதிசார் தொழில்துறைகள், சுற்றுலா, தகவல் தொழினுட்பம் உட்பட பலதரப்பட்ட தொடக்க நிலை வணிகங்களுக்கு இவர்கள் தொடர்ச்சியாக முதலீடுகளை வழங்குகிறார்கள்.
இவைதவிர இன்னும் சில நிறுவனங்களும் வட்டியற்ற துணிகர மூலதனக் கட்டமைப்பில் நிதி வழங்கி வருகிறார்கள்.
நிகழ்வில் Whats App, Google போன்ற வணிகங்களின் வெற்றிக்கதைகளின் காணொளிகளும், பல சாதனை முயற்சியாளர்கள் தொடர்பான காணொளிகளும் காண்பிக்கப்பட்டதோடு, இலங்கையில் தற்போது அதிக இலாபமீட்டக்கூடிய இருபது தொடக்க நிலை வணிகங்களும் விளக்கப்பட்டன.
அனைவரும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உற்சாகமான கருத்துப்பரிமாற்றங்களில் ஈட்டுபட்டமையும், எமது நிகழ்வின் இலக்குகளில் ஒன்றான “புத்தளத்துக்கென்று ஒரு தனியான Venture Capital திட்டம்” பற்றிய சாதகமான நகர்வுகளும் நிகழ்வை நடாத்திய எமக்கு மனநிறைவைத் தந்தன. புத்தளத்தைச் சேர்ந்த நல்ல பல நண்பர்களும் எனக்குக் கிடைத்திருக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்த சக்தியையும், வாய்ப்பையும் வழங்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும், இந்நிகழ்வுக்காக பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
No comments:
Post a Comment