கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளில் அர்ப்பணிப்பான சேவையாற்றிவரும் சுமார் மூவாயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தலா ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு 2018 மே, யூன், யூலை மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளமை மாபெரும் அநீதி ஆகும்.
மிகவும் குறைந்த வேதனத்தில் நிறைவான சேவையை வழங்கிவரும் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இக்கொடுப்பனவை காலம் தாமதியாது வழங்க வேண்டியதுடன் தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் மாதாமாதம் ஒவ்வொரு முன்பள்ளி ஆசியர்களுக்கும் 5000 ரூபாவை வழங்க வேண்டும். இதுவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு விடுக்கும் கோரிக்கையாகும் இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் விடுத்துள்ள மனிதாபிமான கோரிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கிய காலத்தில் அப்போதிருந்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண முதலமைச்சர் இச்சபையின் தவிசாளர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் யாவரும் ஏகமனதான தீர்மானத்தை எடுத்து திறைசேரி மூலம் நிதியினைப் பெற்று முன்பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் முகமாக மாதாமாதம் ஒவ்வொரு முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மூவாயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வந்தது.
கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளில் பணியாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களில் 95 சதவீதமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும். மிகவும் குறைந்த வேதனத்தைப் பெற்று சிறப்பான சேவையை வழங்கி வரும் இவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக வேதனம் வழங்கப்படாமல் உள்ளமை நிர்வாகச் சீர்கேடா அல்லது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயலா? இதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் விடையளிக்க வேண்டும்.
அத்துடன் பெரும் எதிர்பார்ப்புடன் குறைந்தபட்ச கொடுப்பனவை நம்பி கடனாளிகளாக வாழும் முன்பள்ளி ஆசிரியர்களை மேலும் வேதனைக்கு உட்படுத்தாமல் அவர்களுக்கான கொடுப்பனவை மட்டக்களப்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment