விவசாய புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றது.புதிய அத்திவாரங்கள் கூட முளைக்கின்றது. ஆனால் எங்களுடைய விவசாயிகளின் முகங்களில் சந்தோசம் இல்லை. அதனை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கின்றோம் என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.
மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் இன்று (2) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த அலுவலகத்தை திறந்து வைத்த பின் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த மூன்று மாதங்களாக பொய்த்து போன மழையின் காரணமாக வடமாகாணம் வறட்சியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு சில திட்டங்களை எங்களினூடாக மேற்கொண்டு வந்தாலும் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது.
இன்று இந்த நாட்டை ஆட்சி செய்கின்ற ஜனாதிபதி அவர்கள் ஏற்கனவே விவசாய துறையுடன் சம்பந்தப்பட்ட ஒருவராக இருப்பதோடு, விவசாய பிரதேசத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்றார் என்பதன் அடிப்படையில் விவசாயத்தில் அவருக்கு கூடிய அக்கறை இருக்கின்றது.
ஆனால் அதனை செயல்படுத்துவதில் தான் பிரச்சினை இருக்கின்றது. எங்களுடைய மாகாணத்தை பொறுத்த வகையிலே திட்டங்களை வகுப்பவர்கள் நாங்கள். அதனை செயல்படுத்தக்கூடியவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள உத்தியோகத்தர்கள்.
ஆனால் அவற்றை எல்லாம் மீறி தாங்கள் நினைத்த படி சம்மந்தம் இல்லாதவர்களிடம் எல்லாம் திட்டங்களை கொடுத்து இவற்றை நிறைவேற்றுங்கள் என்று கூறுகின்ற போது தான் அங்கே பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
விவசாயிகள் பெற்றுக்கொள்கின்ற பசளையில் இருந்து அறவீடு செய்யப்படுகின்ற ஒரு தொகை பணமே காப்பீட்டு தொகையாக பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
ஆனால் பல விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு தமது காப்பீட்டை எதிர்பார்த்து அவர்களிடம் கேட்டால் திறைசேரியிலே பணம் இல்லை என்று கூறுகின்றார்கள்.
இது ஒரு வேடிக்கையான விடையம்.நாங்கள் எற்கனவே பணத்தை கொடுத்து வைத்திருக்கின்றோம்.
ஒரு மாவட்டத்தில் அல்லது மாகாணத்தில் வறட்சி ஏற்படுகின்ற போது அதனை வழங்குவதற்காக பசளையூடாக கொடுக்கப்பட்ட பணம் எங்கே?
அந்த பணம் சில வேளை பிணைமுறியுடன் போய் விட்டதோ எங்களுக்கு தெரியவில்லை. இப்படியான பிரச்சினைகள் தான் இந்த நாட்டிலே இருக்கின்றது.காப்பீடு என்பது நாங்கள் கொடுக்கின்ற பணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதே.
நாங்கள் பணத்தை அவர்களிடம் கொடுக்கின்றோம்.நாங்கள் பாதிக்கப்படுகின்ற போது அதனை எமக்கு தர வேண்டும் என்பதற்காகவே.
அந்த பணத்தை எல்லாம் மத்திய வங்கியூடாகவும் பிணைமுறிகள் ஊடாகவும் செல்ல விட்டு விட்டு விவசாயிகள் கேட்கின்ற போது மட்டும் பணம் இல்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment