நாவலப்பிட்டிய நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (30) நாவலப்பிட்டிய நகர சபை கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
நாவலப்பிட்டிய நகரில் குடிநீர் தட்டுப்பாடு, வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பிரதான வடிகான் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சீரழிவு, பலநோக்கு சேவைக்கான பொது கட்டிடத்தின் தேவைப்பாடு, நடைபாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொது வைத்தியசாலை குடிநீர் தாங்கி, செப்பனிடப்பட வேண்டிய சிறுவர் பூங்கா, கழிவுநீர் முகாமைத்துவப்படுத்தல் போன்ற விடயங்கள் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதனை ஆராய்ந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளருக்கும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருக்கும், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும் இது தொடர்பான அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், நகர சபையின் கட்டுப்பாட்டிலுள்ள நாவலப்பிட்டிய ஜயதிலக மைதானத்தையும் அமைச்சர் பார்வையிட்டதோடு, அதனை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் நாவலப்பிட்டிய நகரசபை தவிசாளர் அசங்க சம்பத் சஞ்ஜீவ, நகர சபை உறுப்பினர்கள், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும், தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமுமான ஜயதிலக ஹேரத், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லா, கண்டி மாவட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment