சிலரின் நாசகார செயற்பாட்டினால் மட்டக்களப்பு – கண்ணாவௌி, முராக்குளி கண்டத்தில் வசிக்கும் பறவைகள் இருப்பிடங்களை இழந்துள்ளன.
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பெரிய போரதீவு, பளுகாமம் ஆற்றுப்பகுதியை அண்மித்து, கண்ணாவௌி – முராக்குளி கண்டம் எனப்படும் தீவுப்பகுதி காணப்படுகின்றது.
இது இலங்கைக்கு உரித்தான பறவைகள் மற்றும் மிருகங்களும், புலம்பெயர் பறவைகளும் அதிகளவில் சஞ்சரிக்கும் பகுதியாகும். மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த தீவிற்குள் இனந்தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.
தீவிற்குள் காணப்படும் தாவரங்களும் நாணற்புற்களும் தீயில் கருகிப்போயுள்ளன. இனந்தெரியாத சிலரின் இந்த செயற்பாட்டினால், பறவைகள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளன. இதனால், மாலை வேளைகளில் பறவைகள் இருப்பிடங்கள் இன்றி பறந்து திரிவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
வௌிநாட்டுப் பறவைகள் இங்கு வந்து தங்குவதை நிறுத்தி விட்டதாகவும் இவ்வாறான தீ மூட்டல் செயற்பாடுகள் இனி நடைபெறாமல் வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கிராமவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
சிலரின் கண்மூடித்தனமான செயற்பாடுகளால் இயற்கைக்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சூழலை நேசிக்கும் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
No comments:
Post a Comment