வடக்கு மாகாண சபை நிதியை உரிய முறையில் பயன்படுத்தாது திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் நேற்று (2) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எமது விவசாயிகள் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு மன்னார் நகர் பகுதிக்கு வந்து உரிய அதிகாரிகளை சந்தித்து விட்டு செல்ல ஒரு நாள் தேவைப்படுகின்றது.
அந்த பிரச்சினையை நிவர்த்தி செய்கின்ற வகையிலே விவசாயிகள் அதிக அளவில் இருக்கின்ற இப்பிரதேசத்தில் இவ் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு முதலிலே வடக்கு விவசாய அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலத்தின் ஊடாக விவசாயிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
விவசாயிகளை பொறுத்தவகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மழை இல்லாத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. கட்டுக்கரை குளத்தில் இருந்து நீர் வரத்து குறைவாக காணப்படுகின்றது.
இதனால் விவசாயிகளின் பயிர்ச் செய்கைகளுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை. மாகாண விவசாய பணிப்பாளர் வடக்கு விவசாய அமைச்சுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை எமது விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
எமது விவசாயிகள் கிடைக்கின்ற திட்டங்களை நல்ல முறையிலே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நெல்லை உற்பத்தி செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாது ஏனைய வருமானம் தரக்கூடிய வகையிலே எங்களுடைய உற்பத்திகளை செய்வதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது மழை இல்லை. விவசாயிகள் மிகவும் துன்பப்படுகின்றனர். விவசாயிகளின் காப்பீடுகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்கள் தமது சேவையை உரிய முறையில் செய்கின்றார்கள். கிடைக்கின்ற நிதியை உரிய முறையில் பயன்படுத்துகின்றார்கள்.
வடக்கு மாகாண சபை நிதியை பயன்படுத்தாது திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். அது உண்மை இல்லை. நிதியை உரிய முறையில் பயன்படுத்துகின்றார்கள்.
விவசாயிகள் வாழ்கின்ற இடத்தில் இவ் அலுவலக்தை அமைக்க முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment