நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வரும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
ஜாலிய விக்கிரமசூரிய வௌிநாடு செல்வதற்காக நீதிமன்றத்தில் பிணையாளிகளாக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் சகோதரியையும் கைது செய்யுமாறு நீதவான் இன்று (31) மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக ஜாலிய விக்கிரமசூரிய செயற்பட்ட காலத்தில் நாட்டின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபா பணத்தில் ஒரு தொகையை பெற்றுக்கொண்டதாகவும் சட்டவிரோதமாக வௌிநபர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, இலங்கை தூதரகத்தை புனர்நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர் எடுத்துக்கொண்டமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
ஜாலிய விக்ரமசூரிய வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதற்காக பிணையாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்காக விசாரணை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment