கடற்படை படகு மோதி உயிரிழந்த அன்ரனியேசுதாசன் மரணம் தொடர்பில்நீதிகோரல் - ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

கடற்படை படகு மோதி உயிரிழந்த அன்ரனியேசுதாசன் மரணம் தொடர்பில்நீதிகோரல் - ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

கடற்படையினரின் டோறா படகு மோதி உயிரிழந்த எழுவை தீவைச் சேர்ந்த அன்ரனி ஜேசுதாசன் குடும்பத்துக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்த கடற்படை இன்று நான்கு வருடங்கள் கடந்தும் எவ்வித உதவியையும் வழங்காதுள்ளதுடன் தாயை இழந்து தற்போது தந்தையையும் இழந்து தவிக்கும் ஆறு பெண் பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தலை விடுத்து வருகிறது.

எனவே இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நிம்மதியாகவும், சுபீட்சமாகவும், உயிர் அச்சுறுத்தல் இன்றி வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களது தந்தையின் இறப்புக்கு நீதி கிடைப்பதற்கும் வழிசமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது

2018.07.30
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு - 01

யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகை அம்மன் துறைமுகத்திலிருந்து மூன்று கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ள எழுவை தீவின் 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் (532313317 ஏ) கடந்த 2014.12.19 ஆம் திகதியன்று அதிகாலை எழுவை தீவுக் கடலிலே தொழில் செய்துகொண்டிருந்தபோது கடற்படையினரின் டோறாப்படகினால் தாக்கப்பட்டு படுகாயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண் பிள்ளைகளின் தந்தையான இவரது திடீர் மரணம் ஏற்கனவே தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த அவரது பெண் பிள்ளைகளை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ளது.

திரு.அன்ரனியேசுதாசன் அவர்களுடைய மரணச்சடங்கின் போது கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் கடற்படையினரின் கவனயீனத்தினாலேயே குறித்த மரணம் நிகழ்ந்தது என்பதை ஏற்றுக்கொண்டதுடன் அதற்கான இழப்பீட்டை வழங்குவதாகவும், பிள்ளைகளின் கல்விச் செலவு, வேலைவாய்ப்பு, எதிர்காலம் என்பவை தொடர்பில் அக்கறை காட்டுவதாகவும், திரு.அன்ரனியேசுதாசன் அவர்களால் செலுத்தப்பட வேண்டிய கடன் நிலுவைகளை தாமே செலுத்தி முடிப்பதாகவும் உறுதியளித்து நான்கு ஆண்டுகள் நிரம்புகின்ற நிலையில் அவ்விடயங்களில் ஒன்றையேனும் செயற்படுத்தாதுள்ளமை ஏற்கனவே தாயை இழந்து, தந்தையின் இழப்பால் தனித்துப்போன பிள்ளைகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளாகி இறந்து போன திரு.அன்ரனியேசுதாசன் அவர்களின் மரணம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் டீ/367/2014 ஆம் இலக்க வழக்கு 2014.12.22 ஆம் திகதி தொடரப்பட்டு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் (குறித்த வழக்கு தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளது) வழக்குத் தொடுநரும் திரு.அன்ரனியேசுதாசன் அவர்களின் மகளுமான செல்வி.அன்ரனியேசுதாசன் மேரி அஜந்தா அவர்களுக்கு பொலிசாராலும், கடற்படையினராலும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருகின்றது. 

இது தொடர்பில் செல்வி.அன்ரனியேசுதாசன் மேரி அஜந்தா அவர்களால் 2018.07.03ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் URC/JA/099/2018ஆம் இலக்க முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். (முறைப்பாட்டுப்பிரதி இணைக்கப்பட்டுள்ளது)

கடற்படையினரால் அநியாயமாகக் கொல்லப்பட்ட திரு.அன்ரனியேசுதாசன் அவர்களின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்திற்கு இழப்பீடோ, ஏனைய உதவிகளோ இன்றுவரை வழங்கப்படவில்லை. தங்கள் குடும்பத்தின் ஒரேபாதுகாவலனாக இருந்த தந்தையின் உயிரையும், உடலையும் இழந்த பின்னர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பொலிசாராலும், கடற்படையினராலும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படும் சூழலில் இப்பெண்பிள்ளைகள் எழுவை தீவு மண்ணிலே வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே தயவுசெய்து தாங்கள் இந்தநாட்டின் முதல் மனிதன் என்ற வகையில் திரு.அன்ரனியேசுதாசன் அவர்களின் மரணத்திற்கு முறையான நீதி கிடைக்க ஆவனசெய்வதோடு, தாய், தந்தை இருவரையும் இழந்து, வாழ்வாதார வழிகளற்றும், உயிரச்சுறுத்தலோடும், உளரீதியான நெருக்கடிகளுக்குள்ளும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்றி வாழ்ந்துவரும் இப்பெண்பிள்ளைகளின் பேரவல வாழ்வை கருத்திற்கொண்டு அவர்களும் இந்தநாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நிம்மதியாகவும், சுபீட்சமாகவும், உயிர் அச்சுறுத்தல் இன்றி வாழ்வதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களது தந்தையின் இறப்புக்கு நீதி கிடைப்பதற்கும் வழிசமைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment