அரசாங்கத்தை வெளியேற்றும் முதற்கட்ட சமிக்ஞையாக நல்லாட்சிக்கு எதிராக 02 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

அரசாங்கத்தை வெளியேற்றும் முதற்கட்ட சமிக்ஞையாக நல்லாட்சிக்கு எதிராக 02 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த அரசாங்கம் தன்னை அதிகாரத்துக்கு கொண்டு வந்த தரப்பினருக்கு தற்போது தனது நன்றிகளைத் தெரிவிக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகிறது.

இதற்காகவே, நாட்டின் பொதுச் சொத்துக்களையெல்லாம் அந்தத் தரப்பினருக்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் அனைத்தும் இன்று வெளிநாடுகளுக்கு அரசாங்கம் விற்பனை செய்கின்றது.

ஒரு நாட்டின் எதிர்க்காலத்தை அந்த நாட்டின் சொத்துக்களே தீர்மானிக்கும் என்ற நிலையில், தற்போது எமது சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதால் நாட்டின் பொருளாதாரம் பாரிய ஆபத்தான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பை வெளியிடும் வகையில்தான் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது இந்த அரசாங்கத்தை மக்கள் மண் கவ்வச் செய்தார்கள். இந்த நாட்டின் வரலாற்றிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கம் தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளது.

இவ்வாறு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியும் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரத்துக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகிறது.

இந்த அரசாங்கத்துக்கு இனியும் அதிகாரத்தில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே, அரசாங்கத்தை வெகுவிரைவிலேயே வெளியேற்றும் முதற்கட்ட சமிக்ஞையைக் காண்பிக்கும் செயற்றிட்டத்தை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளோம்.

ஜனபல சேனா எனும் இந்த செயற்றிட்டத்தில் எம்முடன் சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள், சமூக அமைப்பினர் என பலரும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பினை வெளியிடவுள்ளனர்.

இந்த செயற்றிட்டத்தை நாம் அன்றைய தினத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளப்போவதில்லை. மாறாக செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதியும் மக்களை இணைத்துக்கொண்டு நாடளாவிய ரீதியாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இனியும் இந்த அரசாங்கத்துக்கு அதிகாரத்தில் இருக்கத் தகுதியில்லை. எனவே, அரசாங்கத்தை வெளியேற்ற அனைத்து மக்களும் எதிர்வரும் 2ஆம் திகதி லிப்டன் சுற்றுவட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment