அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க இராணுவப் பேச்சாளருக்கு தடை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க இராணுவப் பேச்சாளருக்கு தடை

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தடைவிதித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடக்கும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளரும் பங்கேற்று வந்தார்.

அண்மையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாகவும், இறுதிப் போர் தொடர்பாகவும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன சில கருத்துக்களை வெளியிட்டார்.

இந்தக் கருத்துக்களுக்கு இராணுவப் பேச்சாளர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

ராஜித சேனாரத்னவின் கருத்துக்கள் தெற்கில் கடும் சர்ச்சையை தோற்றுவித்திருந்ததுடன், இராணுவ அதிகாரிகள் மத்தியிலும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

ராஜித சேனாரத்னவின் கருத்துக்களை கண்டித்து. அவர் பங்கேற்கும் ஊடக மாநாட்டை இராணுவம் புறக்கணிக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமத் அத்தபத்துவை, வாராந்த ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்கு இராணுவத் தளபதி தடைவிதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையில், இராணுவ அதிகாரி ஈடுபடவேண்டும் என்பதே சிறிலங்கா இராணுவத் தளபதியின் நிலைப்பாடு.

சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி கூறியுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment