தனது பதவியை இராஜினாமா செய்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியின் வெற்றிடத்துக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் நியமிக்கப்படவுள்ளார்.
கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பெயரை இந்நியமனத்துக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிபாரிசு செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர்,கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் ஊடாகவே எம்.எச்.எம்.நவவி பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்பு வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கடந்த பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மயில் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கலந்தாலோசிக்கப்பட்டு பின்பு அதற்கென நியமிக்கப்பட்டிருந்த குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டதன் பின்பே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Vidivelli
No comments:
Post a Comment