2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (04) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 75வது மாதிரிக் கிராமமான முல்லை நகர் வீடமைப்புத் திட்ட திறப்பு விழாவின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மலர்ந்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் கம் உதாவ செயற்றிட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட 75வது மாதிரிக் கிராமமான முல்லை நகர் வீடமைப்புத் திட்டத்தினை திறந்து வைப்பதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.
தங்களது வீட்டுத் திட்டம் திறக்கப்பட்டது போன்று இலங்கை பூராகவும் இன்னும் 753 மாதிரிக் கிராமங்கள் திறப்பு விழா காண உள்ளது. எனவே எதிர்வரும் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என்பதை தெரிவிக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாற்பத்தி எட்டு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அத்தோடு இந்த வருடத்திற்குள் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நூறு மாதிரிக் கிராமங்கள் அமைக்கும் வாய்ப்பினை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளருக்கு வழங்குவேன்.
அத்தோடு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருநூறு மாதிரிக் கிராமங்கள் அமைக்கும் வாய்ப்பினை வழங்குவேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக காணப்படுவதை நான் அறிவேன்.
இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஒவ்வொரு குடும்பத்தின் வீட்டுப் பிரச்சனைகளை எவ்வகையிலாவது தீர்த்து வைப்பேன் என்ற வாக்குறுதியை வழங்குகின்றேன்.
அரசியல்வாதிகள் வந்து பொய்யான வார்த்தைகளை கூறி உங்களை ஏமாற்றுகின்றார்கள் என்று எனக்கு தெரியும். எனது காலஞ்சென்ற தந்தையாரின் மீது கூறுகின்றேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சனைகளுக்கான சகல விதமான தீர்வுகளையும் பெற்றுத் தருவேன் என வாக்குறுதியளிக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் சூபீட்சத்துடனும், சந்தோசத்துடனும் வாழக் கூடிய நிலைப்பாட்டினை எங்களது அரசாங்கத்தின் மற்றும் தலைமைத்துவத்தின் மூலமாக பெற்றுத் தருவோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுப் பிரச்சனைகளுக்கான ஆவணங்களோ, ஆதாரங்களோ நல்லாட்சி அரசாங்கம் வருவதற்கு முன்பு கிடையாது.
ஆனால் எங்களது நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மாவட்ட செயலகங்கள் ஊடாக கிராமங்கள் தோறும் எமது திணைக்களத்தின் சென்று தகவல்களை பெற்றிருந்தோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 87455 பேருக்கான வீடில்லாப் பிரச்சனை காணப்படுகின்றது.
தாங்கள் வீடுகளை கட்டுவதற்கு நுண்கடன் மூலம் கடன் பணம் பெற்று நீங்கள் கடனாளியாக மாறி விடாமல் எமது திட்டத்தின் மூலம் உங்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நாங்கள் உங்களைத் தேடி வருவோம்.
இலங்கை பூராகவும் இன்னும் 753 மாதிரிக் கிராமங்கள் திறப்பதற்கு வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை திறக்க வேண்டும் அந்த வகையில் எஞ்சியுள்ள நாட்களில் இவற்றை செய்து முடிப்பதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த நாட்டுக்கும் மண்ணுக்கும் உதவாதவர்கள் மது அருந்தி விட்டு கூடி நின்று இது நடக்குமா?, இது முடியுமா?, செய்ய முடியுமா? என்று கேட்கின்றார்கள். இந்த நாட்டுக்கும் மண்ணுக்கும் உதவாதவர்களை பார்த்து கூறுகின்றேன் நான் நள்ளிரவு 12 மணியளவில் உறங்கி விட்டு அதிகாலை 4 மணிக்கு எழுந்திருப்பவன். அரசாங்கத்தினால் வழங்கக் கூடிய எந்தவித நலத் திட்டங்களையும் எனது சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்தியதில்லை.
ஆனால் 2019ம் ஆண்டு முடிவதற்குள் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை முடிப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு வேணும் என்றாலும் நித்திரையில் இருந்து எழுந்து கொள்வேன் என்றார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குகதர்ஷன் - மட்டக்களப்பு
No comments:
Post a Comment