முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் உள்ளதை அந்நாட்டு பொலிசார், இலங்கை பொலிசாருக்கு தெரியப்படுத்தி அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய வங்கி முறி தொடர் குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு கோட்டை நீதுவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜரான அரசாங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட அறிவித்தார்.
இது குறித்து, வழங்கப்பட்ட திறந்த பிடியாணையின் அடிப்படையில், சர்வதேச பொலிசாரின் (இன்டர்போல்) தொடர்புபடுத்தல் அலுவலகத்தினால் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூர் நாட்டு பிரஜை என்பதால், அவரை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பிலான உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, கோதாகொட நீதிமன்றிற்கு அறிவித்தார்.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய இரு சந்தேகநபர்களான, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சுபாஷினி சேனாநாயக்க
No comments:
Post a Comment