சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு

தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மின்சார துண்டிப்பு உத்தரவை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்துள்ளது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள அறிக்கையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023 க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறாமல் அந்த ஆலை இயங்கக்கூடாது என கூறப்பட்டிருந்த நிலையில், மே 18-19ஆம் திகதிகளில் அந்த ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடப்பது தெரியவந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கும்படியும் ஆலையை மூடும்படியும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனக் கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய வசதிகளை அரசு நிறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment