அம்பாறை மாவட்டத்தில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மாநகரம் கல்முனையாகும். ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத கிழக்கு மாகாணத்தின் 32 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை தெரிவு செய்யும் பொருட்டு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் முதல்நாள் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் கல்முனை மாநகர முதல்வர், பிரதி முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அமர்வு இன்று ஏப்ரல் 2 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு சபாமண்டபத்தில் நடைபெறுகின்றது. மிகவும் பரபரப்பான சூழ்நிலையில்,பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்தெரிவு இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
'கல்முனை முஸ்லிம்களின் இதயம்' என ஒரு தரப்பினரும், 'இல்லை அது தமிழர்களின் இதயம்'என்று மற்றைய தரப்பினரும் வரிந்துகட்டிக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் உறுப்பினர்களாகவுள்ள சகல முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஆட்சியை முஸ்லிம்களின் கையில் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
மற்றொரு புறத்தில் கட்சிகள் முரண்பாடுகள் என்பதற்கப்பால் கல்முனை மாநகரசபை அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு ஒருமித்து முடிவெடுப்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதுவே ஆரோக்கியமான விடயமுமாகும். இவ்வாறு தமிழரதரப்பு கூறிவருகின்றது.
ஆனால் கல்முனையின் அமைவிடம் குடிசனப்பரம்பலைப் பொறுத்தவரை மேயர் முஸ்லிமாகவும் பிரதிமேயர் தமிழராகவும் வருகின்ற பட்சத்தில் மட்டுமே சபை சீராக இயங்கும். அதற்கும் அப்பால் இனஐக்கியம் பேணப்பட்டு, அமைதி சமாதானத்துடன் மக்கள் நிம்மதி வாழக்கையைத் தொடர முடியும் என்பது நடுநிலைவாதிகளின் கருத்தாகும்.
ஏன் கல்முனை முக்கியத்துவம்பெறுகிறது?
அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 சபைகளிலும் அதிகூடிய கட்சிகள், அதிகூடிய வேட்பாளர்கள் தேர்தலில் நின்றதும் அதிகூடிய கட்டுப்பணம் செலுத்தப்பட்டதும் கல்முனை மாநகரசபையிலேதான்.பெண்கள் அதிகூடிய தொகையில் அதாவது 10பேர் தெரிவாக வேண்டும் என்ற நியதியும் இங்கிருந்தது.
கல்முனை மாநகரசபையானது 43 வேட்பாளர்களைக் கொண்டது. 40 உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும். அவர்களில் பெண்கள் தொகை 10. இம்முறை இச்சபைக்கு 9 கட்சிகளும், 2 சுயேச்சைகளும் நியமனப்பத்திரத்தைத் தாக்கல் செய்தன.இருந்தும் 2 சுயேச்சை அணிகளின் நியமனப்பத்திரம் நிராகரிக்கப்பட்டன. எனவே 9 கட்சிகளும் 4 சுயேச்சைகளும் போட்டியிட்டன. ஆதலால் இங்கு 559 வேட்பாளர்கள் களத்தில் குதித்து தற்போது தொங்கு உறுப்பினர் உள்ளிட்ட 41 உறுப்பினர் தெரிவாகியுள்ளனர்.
இதில் ஐக்கியதேசியக் கட்சி (மு.கா) 12 ஆசனங்கள், சுயேச்சைக் குழு_4 (சாய்ந்தமருது) 9 ஆசனங்கள், தமிழரசுக்கட்சி(த.தே.கூ) 7 ஆசனங்கள், அ.இ.ம.கா 5 ஆசனங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்கள், தேசிய காங்கிரஸ் 1 ஆசனம், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 1 ஆசனம், ஸ்ரீல.சு.கட்சி 1 ஆசனம், சுயேச்சைக் குழு_இரண்டு 1 ஆசனம், சுயேச்சைக் குழு_மூன்று 1 ஆசனம் என அமைந்துள்ளது.
கல்முனை மாநகர சபையில் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட 41 ஆசனங்களுக்கிடையே வாக்கெடுப்பு இடம்பெறவிருக்கின்றது. வாக்கெடுப்பில் கட்சிகள் என்பதற்கு அப்பால் முஸ்லிம்கள் தரப்பில் 28 உறுப்பினர்களும் தமிழர்களது தரப்பில் 13 பேரும் வாக்களிக்கவுள்ளனர்.
கூடுதல் ஆசனங்களைக் கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் அ.இ.ம.கா. என்பன தமக்கிடையே முதல்வருக்கான போட்டிகளை ஏற்படுத்தினால் முன்னொருபோதுமில்லாத வகையில் தமிழ்தரப்புக்கு தலைமையைப் பெறும் வாய்ப்புக்கள் தென்படுவதை அவதானிக்க முடிகின்றது.
சாய்ந்தமருதின் முக்கியத்துவம்!
கல்முனை மாநகரசபை தேசியமட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் அங்குள்ள சாய்ந்தமருது பிரதேசம். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்தில்தான் இத்தேர்தல் அறிவிப்பு வெளியானது.
அதனால் அவர்கள் கட்சிகளை வெறுத்து சுயேச்சையில் நிற்க ஊர்த்தீர்மானம் எடுத்து தீவிரமாகச் செயற்பட்டு இன்று ஒட்டுமொத்தமாக 9ஆசனங்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
தமது கோரிக்கையை நிறைவேற்றும் கட்சியுடன் கைகோர்த்து கல்முனை மாநகரசபை ஆட்சியதிகாரத்தை அமைப்போம் என அவர்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் தாம் ஆட்சியில் பங்கெடுக்கப் போவதில்லை, ஆட்சிஅதிகாரத்திற்கு போட்டிபோடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் பகிரங்கமாகக் கூறி வந்துள்ளனர். மு.கா.தலைவர் அமைச்சர் ஹக்கீம் அழைத்ததையே மறுத்தவர்கள் அவர்கள்.
எனினும் முஸ்லிம்கள் என்ற போர்வையில் அவர்கள் ஓரளவாவது நேசிக்கின்ற அ.இ.ம.காங்கிரஸ் பக்கம் சாயலாம் என்ற கருத்தும் அடிபடாமலில்லை. ஆனால் அப்படி நடந்தால் சுயேச்சையின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.
இன்னுமொரு விடயம் காரைதீவு பிரதேசசபை அமைப்பில் கடந்த 27.3.2018இல் த.அ.கட்சிக்கு மு.கா. ஆதரவு நல்கியுள்ளது. அதேபோல் 29.03.2018 இல் பொத்துவில் பிரதேசபை அமைப்பில் மு.கா ஆட்சியமைக்க த.அ.கட்சி ஆதரவு நல்கியிருந்தது. காரைதீவு சபை அமைப்பு நேரத்தில் த.அ.கட்சியுடன் மு.கா கைகோர்த்து மேலுமொரு உறுப்பினர் தேவையாகவிருந்த வேளை, இதே சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல் அனுசரணையுடன் இறங்கி வெற்றிபெற்ற மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினரை அந்த த.அ.கட்சி மு.கா அணியோடு இணங்க சம்மதம் தெரிவித்திருந்ததையும் இங்கு சுட்டிக்காட்டமுடியும். ஸ்ரீல.மு.காங்கிரஸ் இச்சுயேச்சை அணியினருக்கு பரம எதிரியாகவிருந்தபோதிலும் இக்கூட்டுக்கு பச்சைக்கொடிகாட்டியிருந்தனர். பின்பு நிலைமை மாறியது வேறுவிடயம்.
எவ்வாறு வாக்களிப்பு அமையும்?
கல்முனை மாகநரசபைக்கு ஒரு தொங்கு உறுப்பினர் உள்ளடங்கலாக 41உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் சாய்ந்தமருது சுயேச்சைஅணியின் 9 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார்களெனில் மீதி 32பேருக்கிடையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மூன்று வகையில் ஆட்சியமைக்க வழியுள்ளது.
முதலாவது தெரிவு: த.அ.கட்சியும் ஸ்ரீல.முகாவும்(ஐ.தே.கட்சி) இணைந்து அதாவது அவர்களது மு.காவின் 12ஆசனங்களும் த.அ.கட்சியின் 7ஆசனங்களும் ஏனைய 3தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முடியும். இவ்வாறு நிகழ்ந்தால் மு.கா மேயராக, த.அ.கட்சி பிரதிமேயராக வாய்ப்புண்டு.
இரண்டாவது தெரிவு: ஐ.தே.கட்சியும் அ.இ.ம.காங்கிரசும் மருதமுனை சுயேச்சைஅணி மற்றும் சில முஸ்லிம் உறுப்பினர்கள் சேர்ந்தும் முஸ்லிம் என்ற போர்வையில் ஆட்சியமைக்க முடியும். இங்கு மேயராகவும், பிரதி மேயராகவும் முஸ்லிம்களே வருவர்.
மூன்றாவது தெரிவு: மு.காவுடனான த.அ.கட்சியின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் மு.கா தமக்கு ஆதரவானவர்களை சேர்த்து தனித்து மேயர் பதவிக்கும் அ.இ.ம.காங்கிரஸ் தமக்கு ஆதiவாளர்களைச் சேர்த்து அதே மேயர்பதவிக்கும் இ.த.கட்சி தமக்கு ஆதரவானவர்களைச் சேர்த்து அதே மேயர் பதவிக்கும் போட்டியிடலாம். இந்த மூன்று வகையான தெரிவுகளில் இரண்டாவது தெரிவு என்பது மு.காவிற்குச் சிரமம். சாத்தியப்பாடு குறைவு.
ஆனால் 1வது தெரிவு சாத்தியமாகலாம். தமிழர், முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற கல்முனையில் சபையை பிரச்சினையின்றி சுமுகமாக முன்னெடுத்துச் செல்வதற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது. அதுகூட இரு தரப்பிலுள்ள சிலருக்கு அதிருப்தியாகவிருப்பதும் குறிப்பிடலாம். மூன்றாவது தெரிவின் போது 3 முடிவுகள் வரும். இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய சட்டரீதியான விளக்கமிது.
வரும் முடிவு இறுதியாக அதாவது குறைந்த வாக்கைப் பெறுகின்ற அணியை நீக்கி விட்டு கூடுதலாகப் பெற்ற இரு அணியினருக்கிடையில் மாத்திரம் மீண்டும் வாக்களிப்பு நடைபெற்று அவர்களில் யார் கூடுதலாகப் பெறுகின்றனரோ அவர்கள் ஆட்சியமைக்கலாம்.
இ.த.அ.கட்சி, மு.கா ஆட்சி அமையுமா?
த.அ.கட்சி, மு.கா தலைமைகளிடையே ஓருவித புரிந்துணர்வு இருந்துவருவது ஒன்றும் இரகசியமல்ல. அந்த உறவின் அடையாளமாக காரைதீவு பிரதேசசபை அமைப்பில் கடந்த 27.03.2018இல் த.அ.கட்சிக்கு மு.கா. ஆதரவு நல்கியுள்ளது. அதேபோல் 29.03.2018இல் பொத்துவில் பிரதேசபை அமைப்பில் மு.கா ஆட்சியமைக்க த.அ.கட்சி ஆதரவு நல்கியிருந்தது.
அந்த அடிப்படையில்தான் த.அ.கட்சியினர் காரைதீவு சபையமைப்பில் காரைதீவில் தெரிவான தமிழ் சுயேச்சைஅணியினரை ஒருமாதத்திற்கு முன்னர் மட்டக்களப்பிற்கு அழைத்து பிரதிதவிசாளரைத் தருகின்றோம்,
நாம் ஆட்சியமைக்கலாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பின்னர் இறுதி ஒருசில நாட்களில் முகாவுடன் உறவு வைத்து மு.காவுடன் இணைந்து ஆட்சியமைத்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கிழக்கு மாகாணசபையில் த.அ.கட்சி, மு.கா இணைந்து ஆட்சியமைத்தமையும் அந்த உறவு தொடர்வதும் தெரிந்ததே. இந்தநிலையில் கல்முனை மாநகரசபையில் அந்த உறவை பலப்படுத்தி இனஐக்கியத்துடனான ஒரு ஆட்சியை அமைக்கலாம் என்று வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
மாவை_ ஹரீஸ் பேச்சுவார்த்தை வெற்றியளிக்குமா?
கடந்த வாரம் கல்முனையில் மு.கா. மற்றும் த.அ.கட்சியினருக்கிடையே இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மு.கா சார்பில் பிரதியமைச்சர் ஹரீசும், த.அ.கட்சி சார்பில் அதன் தலைவர் மாவைசேனாதிராஜாவும் ஏனையோரும் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்போது ஆட்சியமைப்பு பற்றிப் பேசப்பட்டது. அங்கு தமிழர் தரப்பில் வழமையாக புரையோடிப் போய்க் கிடக்கின்ற தேவைகள் கோரிக்கையாக அல்லது நிபந்தனையாக முன்வைக்கப்பட்டன. அதாவது கல்முனை தமிழ்ப் பிரதேசசெயலக தரமுயர்த்தல், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம், சாய்ந்தமருது பிரிந்தால் மீதிக்கல்முனையை அப்படியே விடுதல், கட்டாயம் 3ஆகப் பிரிக்க வேண்டுமாகவிருந்தால் தமிழ்க் கிராமங்களை உள்ளடக்கிய தமிழர் நகரசபையொன்றை ஏற்படுத்தவேண்டும், கல்முனை 12ஆம் வட்டாரப் பிரிப்பை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இருகட்சிகள் சேர முடிவெடுத்தாலும் அதிலுள்ள சில உறுப்பினர்கள் மேற்சொன்ன கோரிக்கைகள் உடன்படிக்கைவடிவில் கைச்சாத்திடப்படாத பட்சத்தில் அதற்கு மாறாக வாக்களிக்கவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
காரைதீவு சபை அமைப்பில் பிரதித் தவிசாளர் தெரிவில் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கட்சி ஆதரளிக்கும் முஸ்லிம் உறுப்பினருக்கு வாக்களிக்காமல் நடுநிலையாக இருந்தமை, திருக்கோவில் பிரதேசசபை அமைப்பில் த.தே.கூட்டமைப்புக்குள்ளேயே தவிசாளர் பதவிக்கு இருவர் போட்டியிட்டமை,
மேலும் பிரதித்தவிசாளர் தெரிவில் அக்கட்சியின் சிலர் தனது கட்சிக்கு வாக்களிக்காமல் ஸ்ரீல.சு.கட்சிக்கு வாக்களித்தமை, ஆலையடிவேம்பிலும் சம்மாந்துறையிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை,இதனால் அப்பகுதி தமிழ்மக்களுக்கு தமது கட்சிக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டமை...
இத்தகைய கட்சிக்கட்டுப்பாடு மீறலுக்கெல்லாம் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆனந்தசங்கரி தலைமையிலான த.வி.கூட்டணி உடனடியாக இவ்விதம் செயற்பட்டஇருவருக்கு நடவடிக்கை எடுத்து உறுப்புரிமையை நீக்கியதை அறிவோம்.
கல்முனையை பொறுத்தமட்டில் தமிழரொருவர் எந்தக்கட்சியின் பிரதிநிதியாக இருந்தாலும் அவருடைய தேவை கல்முனைவாழ் தமிழர்களது எதிர்பார்ப்புக்களை ஈடு செய்வதாக இருக்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமென்பதை யாவரும் அறிவர்.
அந்த அடிப்படையில் அனைவரும் ஒருமித்து முதல்வர் வேட்பாளராக பொருத்தமான ஒருவரை முன்மொழிந்து வெற்றி பெற வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது வாக்களித்த கல்முனை மக்களது எதிர்பார்ப்பும் வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் கடமையுமாக இருக்கின்றது.
பூர்வீக உரிமையுள்ள கல்முனை மாநகரத்தில் முதல்வராக போட்டிபோடக் கூடிய உரிமையும் தகுதியும் தமிழர் தரப்புக்கு இருக்கும் போது மற்றவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை அரியாசனம் ஏற்ற வேண்டிய தேவை இல்லை. வெற்றியோ தோல்வியோ நமது தனித்துவத்துடன் முயற்சிக்க வேண்டியது எமது கடமையாகும் என்று தமிழர்கள் பரவலாகக் கூறுவது காதில் விழுகின்றது.
எதுஎப்படியிருந்போதிலும் இன்றைய தெரிவு பரபரப்பான சூழ்நிலையில் இடம்பெறுவதும் முடிவுகள் ஒருசாராரைத் திருப்திசெய்ய, மறுசாராரை அதிருப்திக்குட்படுத்தப் போவதும் தவிர்க்க முடியாதது.
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
No comments:
Post a Comment