போதைக்கு அடிமையாகியுள்ள பாடசாலை மாணவர்களில் அநேகர் நகரங்களை அண்டிய தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு நகரங்களை அண்மித்த கல்வி நிலையங்களுக்கு வரும் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு இரையாக்கப்படுவதாக நகரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மதுளை, எஹலியகொடை, காவத்தை ஆகிய நகர பிரதேசங்களில் இந்நிலைமை பாரதூரமாக காணமுடிவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக வார இறுதி, மாலைநேர, விசேட வகுப்புக்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு வரும் மாணவர்களிடம் மாத்திரமன்றி தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் போதைப் பொருள்பாவனை அதிகரித்து வருவது உணரப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை இலகுவாக சந்தைப்படுத்தவும் பணத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளவும் இலகுவான பிரிவினராக இளம் பராய மாணவர்கள் காணப்படுவதனால் போதைப்பொருள் வியாபாரிகள் இவர்களை துரும்பாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் காலத்துக்கு காலம் ஒவ்வொரு பெயரில் போதைப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தற்போது வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு போன்றவற்றினால் உடனடியாக தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் அண்மைக்காலமாக அறிமுகப்படுத்தப்படுவதாகவும் இப்போதைப் பொருட்களால் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் புற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் சுகாதார மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்கின்றனர்.
No comments:
Post a Comment