ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 31, 2018

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமைக்கு ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

எனினும் எதிர்வரும் புதுவருடத்தில் தந்தையைப் பார்ப்பதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், தந்தையின் விடுதலைக்கு பல வழிகளிலும் உதவி செய்த அனைத்துத் தரப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்திருந்தார். இதனால் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெற்றோர்கள் அற்ற நிலையில் நிர்க்கதியாகியுள்ளனர்.

இந்த நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்திருந்தனர்.

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி வடக்கு கிழக்கு கொழும்பு உள்ளிட்ட ஸ்ரீலங்காவின் பல பகுதிகளிலும் கையெழுத்து பெறும் நடவடிக்கையும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களைச் சந்தித்த ஆனந்த சுதாகரனின் மகன் மற்றும் மகள் தமது தந்தையை புது வருடத்திற்கு முன்னதாக விடுவிப்பதாக ஐனாதிபதி தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment