கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய சுற்றுப்பயணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பிய நிலையில், இந்தியப் பயணத்தால் உள்நாட்டிலேயே அவருக்கு செல்வாக்கு சரிந்துள்ளது.
கண்டா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது ஒருவார சுற்றுப்பயணத்தில் தாஜ்மஹால், அமிர்தரஸ் பொற்கோவில், காந்தி ஆசிரமம் போன்ற பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றிப்பார்த்து ரசித்தார்.
இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து அவர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி வந்து இறங்கும் போதே இந்திய அரசின் சார்பில் வெளியுறவு அதிகாரிகள் மட்டுமே நேரில் சென்று வரவேற்றனர். இது முதல் சர்ச்சையாக எழுந்தது.
குறைந்தபட்சம் ஒரு அமைச்சராவது ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தாரை நேரில் சென்று வரவேற்றிருக்கலாம் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பின்னர், டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் இரவு விருந்து அளித்தார். இதில், பல்வேறு பிரபல நபர்கள் பங்கேற்றனர்.
காலிஸ்தான் பிரிவினை பேசும் சீக்கியர் ஒருவருக்கு இந்த விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு ஆத்திரத்தை வரவழைக்க, பின்னர், அந்த அழைப்பு திரும்ப பெறப்பட்டது. இவ்வாறாக கலவையான சர்ச்சை, கருத்துக்கள் ஜஸ்டினின் இந்திய பயணத்தில் எழுந்தது.
இந்நிலையில், இப்சோஸ் (Ipsos) என்ற நிறுவனம் கனடாவில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. தற்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்கு என்ற கேள்விக்கு, ஜஸ்டின் ட்ரூடோவின் லிபெரல் கட்சியை விட எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அவரது இந்த செல்வாக்கு சரிவுக்கு இந்திய சுற்றுப்பயணமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்டினின் இந்திய சுற்றுப்பயணம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என 40 சதவிகிதம் மக்கள் வாக்களித்துள்ளனர். வெறும், 16 சதவிகிதம் பேர் மட்டுமே நேர்மறை விளைவு என்கின்றனர். மேலும், 54 சதவிகிதம் பேர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் வாக்கு முடிவில் தெரிவிக்கப்பள்ளது. இந்த வாக்கெடுப்பு பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment