கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை கிராமத்தில் வீசிய கடும்காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிட வசதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்காலிகமாக தனியார் வீடுகளில் இவர்கள் தங்குவதற்காக மாதாந்த வாடகையாக 07 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (28) இரவு வீசிய மினி சூறாவளியினால் பாதிக்கப்பட்டு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்களுடைய மாடி வீட்டுத் தொகுதி புனரமைப்புச் செய்யப்படும் வரை இந்த உதவுத்தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதhக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை மீள குடியமர்த்துவது தொடர்பாகவும், நஷ்டஈடு மற்றும் நிவாரணங்கள் வழங்குவது தொடர்பான உயர் மட்டக் கலந்தரையாடல் நேற்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி. வணிகசிங்க தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
தனியார் வீடுகளில் வாடகை செலுத்தி தங்குவதற்கு விருப்பமில்லாதவர்களை பாதிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீட்டுத்திட்ட தொகுதியை உடனடியாத திருத்தியமைத்து தற்காலிகமாக குடியமர்த்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தப்படும்வரை பாடசாலையில் தங்கி இருப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதோடு, அம்மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு என்பன தொடர்ந்தும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதில் காணப்படுகின்ற வீதி, குடிநீர், மின்சாரம் போன்றவற்றை உடனடியாக புனரமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment