தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பும் வேலைத் திட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் எதிர்வரும் 7ஆம் திகதி நுகேகொடையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் மக்களை வீதிக்கிறக்கி பேரணி நடத்தவுள்ளோம். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பிருக்குமாயின் நுகேகொடை பேரணில் கலந்துகொள்ள வேண்டும். அதுவே அவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (01) பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் எனவும் அதனைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டு வந்தோம். எனினும் அது நடைபெறவில்லை. மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று ஒரு மாத காலத்தை அண்மிக்கிறது. எனினும் உள்ளூராட்சி மன்றங்களை அமைக்க முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற்ற பின்னர் சபைகளை அமைப்பதற்கு இவ்வாறு நீண்ட காலம் எடுத்த சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலை நடத்தாது நல்லாட்சி அரசாங்கம் நீண்ட காலம் இழுத்தடிப்பு செய்து வந்தது. அத்துடன் தற்போது உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கும் முதுகெலும்பற்ற நிலையில் அரசாங்கம் உள்ளது.
ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடத்திலிருந்து வீட்டுக்கனுப்ப வேண்டும். அதற்காக மக்களை வீதிக்கிறக்கி போராடவுள்ளோம். எனவே எதிர்வரும் ஏழாம் திகதி நூகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிராக பேரணி நடத்தவுள்ளோம்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தற்போது சிங்கப்பூர் முகவரியில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் பிரதமரே பொறுப்புக்கூற வேண்டும். அர்ஜுன மகேந்திரன் பிடிபட்டால் சகல விடயங்களும் வெளிப்படும். எனவே அவரை மறைத்து வைப்பதற்கே பிரதமர் முயற்சிக்கிறார்.
மேலும் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கே இவ்வாறு செய்கிறார். அவருக்கு பிரதமர் பதவி இல்லாமல்போகுமாயின் சகல விடயங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவர். ஆகவேதான் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை மறைத்து வைத்துள்ளனர். அர்ஜுன மகேந்திரனை திட்டமிட்டே மறைத்து வைத்துள்ளனர்.
அத்துடன் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு நாம் ஆதரவு வழங்குவோம். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிக்கட்சி கொண்டுவருவதற்கு ஏற்கனவே தயாரக இருந்தது. எனினும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருமாக இருந்தால் அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பிரபலங்கள் உட்பட அதிகளவானோர் அதற்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment