ரஷியாவில் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், எம்.பி.க்கள் மத்தியில் புதின் பேசினார். அப்போது அவர் வறுமையை குறைப்போம் என உறுதி அளித்தார். ரஷிய நாட்டில் வரும் 18-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் போட்டியிடுகிறார்.
சுயேச்சையாக போட்டியிடும் அவரை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பவல் குருதினினும், எல்.டி.பி.ஆர். கட்சி சார்பில் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கியும் களம் இறங்கி உள்ளனர். இருப்பினும் இந்த தேர்தலில் புதின்தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் 40 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆதரவை தொடர்ந்து தக்கவைத்து உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இந்த தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெறாவிட்டால், இரண்டாவது சுற்று தேர்தல் ஏப்ரல் மாதம் 8-ந் தேதி நடைபெறும். இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் (அதிபர் மாளிகை) புனித ஜார்ஜ் அரங்கில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில், தற்போதைய பதவி காலத்தில் கடைசி முறையாக விளாடிமிர் புதின் நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த உரை வரலாற்று சிறப்பு மிக்கது. ரஷியாவின் முன்னேற்றத்துக்கு இனி வரும் ஆண்டுகள் மிக முக்கியமானவை. யார் அதிபராக வருவார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், நாடு சவால்களை சந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப புரட்சியின் சவால்களை நாம் எதிர்கொண்டு ஆக வேண்டும்.
இது உள்நாட்டு அரசியலுக்கும், அதிபர் தேர்தலுக்கும் தொடர்பு இல்லாதது. யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஒவ்வொரு ரஷிய குடிமகனும், உலகைச்சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாம் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நமக்கு முக்கியம்தான்.
வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஜப்பான், பிரான்ஸ் நாடுகள் போன்று ரஷியர்களின் ஆயுள்காலமும் அதிகரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். வலிமை வாய்ந்த அன்னியச்செலாவணி பொருளாதாரத்துடன் ரஷியா நல்ல நிலையில் இருக்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில் நாட்டின் வறுமையை பாதியாகக் குறைக்க வேண்டும்.
2000-ம் ஆண்டில் நாட்டில் 4 கோடியே 20 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தனர். இப்போது அது 2 கோடியாக குறைந்து உள்ளது. ஆனால் இன்னும் இது குறைய வேண்டும். குறைந்தபட்சம் பாதியாக குறைய வேண்டும். அதைச்செய்வோம்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மக்கள் தொகை பெருக்கம், ஸ்திரமாக இருக்க வேண்டிய தேவையும் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளின் முடிவில் ரஷியர்களின் ஆயுள்காலம் 80 ஆண்டுகளை கடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment