அமெரிக்க - இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவை பின்னோக்கிப் பார்ப்பதற்கு மேலாக, பிராந்தியத்தில் சகிப்புத்தன்மையுடன்கூடிய நிலையான ஜனநாயகத்துடனான இலங்கையின் எதிர்காலத்திற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ளதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்தார்.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவையும் இது குறிக்கின்றது. இந்த மைல் கல்லினைக் கௌரவிக்கும் முகமாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகமானது எதிர்வரும் 12 மாதங்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது.
நாடின் எல்லாப் பின்புலங்களையும் சகல மதங்களை சார்ந்த இலங்கையர்களையும் இணைத்து மேற்கொள்ளப்படும் கலாச்சார நிகழ்வுகளையும் கல்வி மற்றும் சமூக ஈடுபாடுகளை உள்ளடக்கிய #USASL70 என்ற நிகழ்ச்சித் திட்டமானது கடந்த 7 தசாப்தகால ஐக்கிய அமெரிக்கா - இலங்கைக்கிடையிலான உறவுமுறையின் மதிப்பு மற்றும் பங்காண்மையின் அம்சங்களை முக்கியத்துவப்படுத்துகிறது.
எமது தூதரகச் சமூகமானது இலங்கை நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடன் 70 வருட சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்வடைகிறது. ஏழு தசாப்தங்களாக ஐக்கிய அமெரிக்க அரசானது இலங்கையுடன், மிகப்பெரிய வெளிநாட்டு உதவிக் கொடை வழங்குனர்களுள் ஒருவராகவோ அல்லது இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராக தோளோடுதோள் நின்றுள்ளது.
இந்நிலையில், இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு நியூயோர்கைச் சேர்ந்த ஜாஸ் இசைக் கலைஞரான விக்ளிஃப் கோர்டன் (Wycliffe Gordon ) இம் மாத இறுதிப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடுசெய்துள்ள மாபெரும் கலை நிகழ்ச்சியிலும் அவரது குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
ஒரு வருடத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகளில் ஐக்கிய அமெரிக்காவின் படத்தயாரிப்பாளர்கள், அமெரிக்க திரைப்படக் காட்சி, அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கல்விச் சந்தை, இலங்கை இளைஞர்களுடனான விளையாட்டு பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் எமது திட்டத்தில் உள்ளடக்கப்பட்டள்ளன.
#USSL70 என்ற நிகழ்ச்சித்தட்டமானது இலங்கைக்கு நல்லெண்ண நோக்கில் விஜயம் மேற்கொள்ளும் அமெரிக்க இராணுவத்தின் இருதரப்பு ஒப்பந்தக் கைச்சாத்திடுதல் போன்ற புதிய முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு முனைப்புக்களையும் எடுத்துக்காட்டும்.
அத்துடன் இருதரப்பு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சி செயற்பாடுகளின் பிரசாரத்தின் போது, இராணுவத்தினர் அனர்த்த பதிற்செயற்பாடுகளை அதிகரித்துக்கொள்வதுடன் இருநாடுகளுக்கிடையிலான நடவடிக்கைக்கான திறனையும் விஸ்தரித்துக் கொள்வர்.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவராலயத்தின் ஆதரவுடன் 21 ஆம் நூற்றாண்டுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை இளைஞர்களைத் தயார்படுத்த உதவும் அதேவேளையில் இலங்கையின் பாற்பண்ணை உற்பத்தித் தொழிலை மிகவும் உற்பத்தி திறனாகச் செய்வதற்கு விவசாய உதவிகளும் வழங்கப்படும்.
“எமது #USASL70 நிகழ்ச்சித்திட்டம், நம் வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்பதற்கு மேலாக, பிராந்தியத்தில் சகிப்புத்தன்மை மற்றும் ஒரு செழிப்புத் தன்மையுடன் கூடிய ஒரு நிலையான ஜனநாயகத்துடனான இலங்கையின் எதிர்காலத்திற்கான ஒரு பார்வை நோக்கு பற்றியதாகும்.
இன்னும் 70 வருடங்களிலும் அதற்குப் பின்னும் அமெரிக்கா அந்தப் பார்வை நோக்குகளை யதார்த்தமாக்குவதற்கு எமது ஒருவருட நிகழ்ச்சித்திட்டம் உதவி செய்யும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment