ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சிரியாவுக்கு வடகொரியா வழங்கியுள்ளதாக ஐ.நா. குற்றம்சாட்டி உள்ளது. சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டமாஸ்கசின் புறநகரான கவுட்டாவை மீட்க சிரியா ராணுவம் கடந்த 8 நாட்களாக அதிரடி குண்டுவீச்சு நடத்தியது.
ரஷிய ராணுவத்துடன் இணைந்து சிரியா நடத்திய குண்டுவீச்சில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 556 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டுகள் வீசி பலரை கொன்று குவித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அதை சிரியாவும் ரஷியாவும் மறுத்துள்ளன. கவுட்டாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தொடர்ந்த குண்டுவீச்சு நடந்து வருகிறது. இதற்கிடையே ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களை சிரியாவுக்கு வடகொரியா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குளோரின் குண்டு தயாரிக்கும் போது ஆசிட்டின் தாக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடம் அமைய பலம் வாய்ந்த செங்கற்கள் மற்றும் வால்வுகள் குழாய்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டன. மேலும் ரசாயன குண்டு எனப்படும் குளோரின் குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை வடகொரியாவின் ஏவுகணை நிபுணர்கள் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
இவை சீன வர்த்தக நிறுவனம் மூலம் சட்ட விரோதமாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் பல தடவை கப்பல்களில் அனுப்பப்பட்டுள்ளன. இவை தவிர பல ஆண்டுகளாக ரசாயன குண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் ஐ.நா.சபையின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தகவலை அமெரிக்க பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment