இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 125 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டத்தை நேற்று இந்திய பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்தார். அயல் நாடுகளான இலங்கை, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை இதில் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்தது. அது இம்முறை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைக்கவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு 14,798 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில், வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும், 135 கோடி ரூபா அதிகமாகும்.
இதில், 6479.13 கோடி ரூபா, நாடுகளுக்கான உதவித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக, இலங்கைக்கு இந்த ஆண்டில் 125 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. பூட்டானுக்கு 3714 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு 375 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட, 75 கோடி ரூபா அதிகமாகும்.
கடந்த ஆண்டு 520 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இம்முறை 350 கோடி ரூபாவே ஒதுக்கப்படுகிறது. ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்துக்கு 150 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளுக்கு 330 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு 125 கோடி ரூபாவும், ஒதுக்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment