புகையிரத இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பயணிக்கும் தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, 150 நாளாந்த புகையிரத சேவைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு விதிமுறைகளை மீறி புகையிரத சாரதி உதவியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு (07) முதல் இப்பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.
குறித்த விடயம் தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில் இன்று (07) நண்பகல் 12 மணியளவில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன், புகையிரத தொழிற்சங்கத்தின் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, புகையிரத மேற்பார்வை நடவடிக்கை அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று நள்ளிரவு (08) முதல் இந்த போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி, புகையிரத சாரதிகளால் திடீர் பணி புறக்கணிப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, இதன் காரணமாக பெருமளவான பயணிகள் அசௌகரியங்களுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment