பாராளுமன்றத்தில் இடம்பெறும் தமிழ் தேசிய கட்சிகள், மாகாண சபைகள் தொடர்பில், "கூச்சபடும் இளம் பிள்ளையைப்போல்" வாய் திறந்து குரல் எழுப்ப தயங்குகிறார்கள். இந்நிலையில், 13ஆம் திருத்தம் தொடர்பில், முன்னாள் முதல்வர் நண்பர் சி.வி. விக்கினேஸ்வரன், கரிசனை காட்டி கதைத்து இருப்பது நல்லதே. ஆனால், மாகாண சபைகள், 13ஆம் திருத்த அமுலாக்கம், தேர்தல், ஆகியன தொடர்பில், "இந்தியா கரிசனை காட்டாதது ஏன்? பாரதத்தின் இயலாமையா? தமிழரின் மீது அக்கறையின்மையா" என நண்பர் விக்கி, கேள்வி எழுப்பி உள்ளமை அத்துணை பொருத்தமற்றது என எண்ணுகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமலாக்கம் குறித்து, தமிழ் தேசியக் கட்சிகள் வெறுமனே இந்திய அரசை குறைசொல்வது பொறுத்தமற்றதாகும்.
இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஆகிய பாராளுமன்ற கட்சிகள் மாகாண சபை தேவை என உரக்க தாம் சொன்னால், சமஷ்டி நிலைபாடு என்னானது என்ற கேள்வி எழுந்து விடுமோ என பயப்படுகிறார்கள்.
ஆகவே, இது தொடர்பில், “தேர்தல் நடக்க வேண்டும். நடந்தால் நாங்களும் போட்டியிடுவோம்” என அவர்கள் முணுமுணுக்கின்றனர். இலங்கை தமிழரசு கட்சிக்குள், இது தொடர்பில் இரட்டை நிலைப்பாடு இருக்கிறது.
அதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படையாகவே 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறார், ஆனால் அதே சமயம் அவரும், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயார் என்கிறார்.
13ஆம் திருத்தம், இறுதித்தீர்வு என இந்தியா வலியுறுத்தியதாக தெரியவில்லை. எவரும் அப்படி நினைக்கவில்லை. இருப்பதை பெற்று, தம்மை திடப்படுத்திக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்ற பொது கருத்து நிலவுகிறது.
தனது பங்களிப்பினால் இலங்கை அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்ட மாகாண சபை சட்டத்தை சமீப காலம் வரை பாரத அரசு வலியுறுத்தியே வந்தது. ஆனால், அதற்கு சமாந்திரமாக சம்பந்தபட்ட இலங்கை தமிழ் கட்சிகளே போதுமான அக்கறை காட்டாதபோது, இந்திய தரப்பு சலிப்படைந்து இருப்பதாக, நான் புரிந்து கொண்டுள்ளேன்.
நண்பர்கள் சுரேஷ் பிரேமசந்திரன், வரதராஜபெருமாள் ஆகியோர் மட்டும்தான் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் குறித்து தெளிவாகவும் தைரியமாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரசியல் வலிமை போதுமான அளவில் இல்லை. இந்நிலையில், இந்திய அரசை குறை சொல்வது பொறுத்தமற்றதாகும்.

No comments:
Post a Comment